“இம்ரான் கானை நடத்தும் விதம் அதிர்ச்சி அளிக்கிறது” – மைக்கேல் ஹோல்டிங்

Priya
701 Views
1 Min Read

பாகிஸ்தான் சிறையில் வாடும் அந்நாட்டின் முன்னாள் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் கேப்டனுமான இம்ரான் கானை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும் என்று மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் ஹோல்டிங் வலியுறுத்தியுள்ளார்.

இம்ரான் கானுக்கு உரிய மருத்துவ சிகிச்சையும், குடும்பத்தினரை சந்திக்கும் வாய்ப்பும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி முன்னாள் கேப்டன்கள் எழுதிய கடிதத்துக்கு முழு ஆதரவு தெரிவித்த ஹோல்டிங், “மனிதர்களை இவ்வாறு நடத்தக் கூடாது. கொலை செய்தவர்கள்கூட இப்படிப்பட்ட நிலையில் நடத்தப்படுவதில்லை. இம்ரான் கானை மட்டும் ஏன் இவ்வாறு நடத்த வேண்டும்?

இம்ரானுடன் விளையாடியிருக்கிறேன். அதிகப் போட்டிகளில் ஆடவில்லை என்றாலும் ஒருசில ஒருநாள் போட்டிகளிலும் இங்கிலாந்து கவுண்ட்டி கிரிக்கெட்டிலும் அவருடனும் அவருக்கு எதிராகவும் விளையாடியிருக்கிறேன். லண்டனில் புற்றுநோய் மருத்துவமனைக்காக அவர் நிதி திரட்டியபோதும் அவருடன் சென்றிருக்கிறேன். அவர் எப்படிப்பட்ட மனிதர் என்பது எனக்குத் தெரியும். அவரது தற்போதைய நிலை மிகவும் வேதனையாக உள்ளது.

இம்ரான் கானின் உலகளாவிய புகழ் அவருக்கு எதிரான விரோதத்துக்கு காரணமாக இருக்கலாம். இம்ரான் கானைவிட உலகம் முழுவதும் அறியப்பட்ட பாகிஸ்தானியர் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அவர் நடத்தப்படும் விதம் அதிர்ச்சியளிக்கிறது.

இது தொடர்பாக முன்னாள் கேப்டன்கள் எழுதிய கடிதத்துக்கு முழு ஆதரவு தெரிவிக்கின்றேன். அதன்மூலம் என்ன விளைவு ஏற்படும் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் ஒரு மனிதனை இப்படி நடத்தக் கூடாது என்பதே நம் கோரிக்கை.

பாகிஸ்தான் கிரிக்கெட் கடந்த 11 ஆண்டுகளில் கடும் பின்னடைவு கண்டு வருகிறது. கிரிக்கெட் வாரியத்துக்கு சுமார் 9 தலைவர்கள் மாறியிருக்கின்றனர். இத்தகைய தொடர் தலைமை மாற்றங்கள் எந்த விளையாட்டுக்கும் நல்லதல்ல. ஏதோ ஒன்று சரியாக இல்லை என்பது தெளிவாகிறது” என்றார் மைக்கேல் ஹோல்டிங்.

Share This Article
Leave a Comment

Leave a Reply