தமிழகத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் நேற்று லண்டன் புறப்பட்டுச் சென்றார். நேற்று இரவு 10 மணி அளவில் சென்னையில் இருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் துபாய் சென்ற முதல்வர், அங்கிருந்து மற்றொரு விமானத்தில் லண்டன் சென்றார்.
லண்டனில் முதலீட்டாளர்கள் சந்திப்பில் பங்கேற்கும் முதல்வர் விஜய், பல்வேறு தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து, தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுக்க உள்ளார். லண்டனில் உள்ள புகழ்பெற்ற ‘சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேஸிங் சர்க்யூட்’ வசதிகள் மற்றும் அதற்கான சுற்றுப்பாதையையும் முதல்வர் பார்வையிட உள்ளார்.
அப்போது, தனது நண்பர் நடிகர் அஜித்குமாரின் கார் பந்தயத்தை முதல்வர் பார்வையிட இருப்பதாகவும் கூறப்படுகிறது. லண்டனில் வசிக்கும் தமிழர்களைச் சந்தித்தும் முதல்வர் கலந்துரையாட உள்ளார்.
இப்பயணத்துக்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்வதற்காக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, தொழில் துறை வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் தீபக் ஜேக்கப் மற்றும் உயர் அதிகாரிகள் ஏற்கெனவே லண்டன் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
லண்டன் பயணத்தை முடித்துக் கொண்டு முதல்வர் விஜய் செப்.17-ம் தேதி காலை துபாய் வழியாக சென்னை திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை விமான நிலையத்தில் விவிஐபிக்கள் மட்டுமே செல்லும் 6-வது நுழைவுவாயில் வழியாக முதல்வருடன் அவரது நெருங்கிய நண்பர் விஷ்ணு ரெட்டி செல்ல பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று அனுமதி மறுத்தனர். இதனால், முதல்வர் விஜய்யும் விவிஐபி நுழைவுவாயிலை தவிர்த்து, பயணியர் முனையமான டெர்மினல் 2-ல் டி-9 நுழைவுவாயில் வழியாக உள்ளே சென்றார்.

