சீனாவின் மோகி நகரில் ஜூனியர் ஆசியக் கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் பிரிவில் இந்திய அணி தனது 3-வது லீக் ஆட்டத்தில் நேற்று ஜப்பானை எதிர்த்து விளையாடியது. இதில் இந்திய அணி 7-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்திய அணி தரப்பில் பூர்ணிமா யாதவ் (14, 46-வது நிமிடம்), கீதா யாதவ் (41, 45-வது நிமிடம்) ஆகியோர் தலா 2 கோல்களும் கிருஷ்ண சர்மா (5-வது நிமிடம்), சுப்ரியா (9-வது நிமிடம்), சனிகா சந்திரகாந்த் (50-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.
இந்திய மகளிர் அணிக்கு இது 3-வது வெற்றியாக அமைந்தது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 4-1 என்ற கோல் கணக்கில் கொரியாவையும், 2-வது ஆட்டத்தில் 11-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவையும் வீழ்த்தியிருந்தது.
இதன் மூலம் 9 புள்ளிகளுடன் இந்திய அணி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது. இந்திய மகளிர் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று சீனாவை எதிர்கொள்கிறது. சீனா 2 ஆட்டங்களில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் உள்ளது.

