“ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக விஜய் ஏற்றுக்கொள்வார்” – நாராயணசாமி

Priya
688 Views
4 Min Read

“ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக தவெக தலைவர் விஜய் ஏற்றுக்கொள்வார். அமைச்சரவையில் இருந்து வெளியேறுவோம் என்று காங்கிரஸ் அமைச்சர்கள் கூறியிருப்பது அவர்களின் எண்ணம். தங்கள் எண்ணத்தைச் சொல்ல அவர்களுக்கு உரிமை உண்டு. இது ஜனநாயக நாடு. நாங்கள் கூட்டணியில் இருப்பதால் யாருக்கும் அடிமை கிடையாது.” என்று புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மேகேதாட்டு அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடக அரசு மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. அது கர்நாடக எல்லைக்குள் இருந்தாலும் காவிரி நதிநீர் தமிழகம், புதுச்சேரியின் கடைமடை பகுதியாக இருக்கும் காரைக்காலுக்கு தடையாக இருக்கும். ஏற்கெனவே உச்ச நீதிமன்ற தீர்ப்பு, காவிரி நதிநீர் ஆணையத்தின் உத்தரவின்படியும் கர்நாடக அரசு தொடர்ந்து காவிரி நதிநீரை பிரித்து தமிழகத்துக்கு கொடுப்பதற்கு இடையூறு விளைவித்து வருகிறது. தமிழக அரசும் புதுச்சேரி மாநிலத்துக்கு ஒப்பந்தம் அடிப்படையில் கிடைக்க வேண்டிய 7 டிஎம்சி தண்ணீரை கொடுப்பதற்கும் காலதாமதம் படுத்துகிறார்கள்.

இதற்கிடையில் மேகேதாட்டு அணை கட்டினால் காவிரி நீர் தமிழகத்துக்கு வருவது முழுமையாக நிறுத்தப்படும். இதனால் காவிரி டெல்டா பகுதியில் உள்ள விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள். ஆகவே மேகேதாட்டுவில் அணைக் கட்டக்கூடாது என்று தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவையில் அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள்.

பெங்களூருக்கு குடிநீர் என்ற போர்வையில் கர்நாடக முதல்வர் மேகேதாட்டு அணையை கட்டுவோம் என்று கூறுகிறார். ஏற்கெனவே கர்நாடகம், தமிழகம், புதுச்சேரி அரசுகளுக்கு இடையே உள்ள ஒப்பந்தத்தின் அடிப்படிடையில் எந்தவொரு புதிய அணை கட்ட வேண்டும் என்றாலும் பாதிக்கப்படும் மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் கட்டக்கூடாது என்று உள்ளது.

ஆகவே மேகேதாட்டு அணை கட்டுவதை முழுமையாக காரைக்கால் பகுதி மக்கள் எதிர்க்கிறார்கள். கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி இருந்தாலும் புதுச்சேரி மாநில மக்களின் நலன் கருதி மத்திய அரசானது தமிழகம், புதுச்சேரி விவசாயிகளின் பிரச்சனையை கருத்தில் கொண்டு மேகேதாட்டு அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி கொடுக்கக்கூடாது. புதுச்சேரியில் 6 நாட்கள் சட்டப்பேரவை நடைபெற்றது. மக்கள் நலத்திட்டங்கள், மாநில வளர்ச்சி, வேலைவாய்ப்பு, கல்வியின் தரம், மருத்துவத்துறையில் மாற்றம் வரும் என்றெல்லாம் மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் இவர்கள் வானத்தில் கோட்டை கட்டுகிறார்கள்.

Advertisement

துணைநிலை ஆளுநர் உரையில் விமான நிலைய விரிவாக்கத்துக்கு ரூ.4,500 கோடி, ரூ.4,500 கோடி மீன்வளத்துக்காக ரூ.2,400 கோடி, சாலைகளை புதுப்பிக்க ரூ.1,500 கோடி என ரூ.14,500 கோடி நிதி வரும் எனப் பட்டியல் போட்டு கொடுத்துள்ளார். ஆனால், குறிப்பிட்ட நிதி வந்துவிட்டதா? அது அந்தந்த துறைகளுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டதா?. இவர் சொல்லியிருக்கும் திட்டங்களை நிறைவேற்ற இன்னும் 10 ஆண்டுகள் ஆகும். எனவே துணைநிலை ஆளுநரின் உரை உப்பு சப்பு இல்லாத உரை. இதனை கனவுலகத்தில் இருப்பவர்கள் தான் பாராட்ட முடியும்.

முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்த பட்ஜெட்டில் சிலிண்டர் மானியம், முதியோர் உதவித்தொகை உயர்த்தியதை தவிர வேறு ஒன்றும் இல்லை. தாக்கல் செய்யப்பட்டுள்ள ரூ.14,300 கோடி பட்ஜெட்டில் 80 சதவீதம் ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்டவைகளுக்கு செலவிடப்படும்.

வளர்ச்சி திட்டங்களுக்கு இருக்கும் தொகை வெறும் ரூ.2,300 கோடி தான். இதுதான் இந்த அரசின் நிலை. மத்திய தணிக்கை குழுவினரின் தணிக்கைபடி ரூ.1,041.79 கோடியை செலவு செய்யாமல் மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளனர். ஒருபுறம் நிதி பற்றாக்குறை என்கின்றனர். மற்றொருபுறம் துறைகளுக்கு ஒதுக்கிய தொகையை 10 சதவீதம் செலவிடவில்லை. இது நிர்வாகத்தின் திமையின்மை, செயல்படாத தன்மை. அதனால் தான் முறையாக நிதியை செலவிட முடியவில்லை.

நாங்கள் ஆட்சியில் இருந்தபோது மத்தியில் பாஜக ஆட்சி இருந்தது. ஆகவே எங்களுக்கு மாநில அந்தஸ்து கொடுக்கவில்லை. இப்போது இணக்கமான அரசு இருக்கிறது. மாநில அந்தஸ்து வாங்குவதில் என்ன பிரச்சினை இருக்கிறது. மாநில அந்தஸ்து கேட்க முதல்வர், அமைச்சர்கள் சென்று பிரதமரை சந்தித்து வலியுறுத்த வேண்டும்.

ஆனால் முதல்வர் பேசிக்கொண்டு மட்டுமே இருக்கிறார். இங்கு துணைநிலை ஆளுநர் சூப்பர் முதல்வராகவும், முதல்வர் ரங்கசாமி டம்மி முதல்வராகவும் இருக்கின்றனர். ஆதலால் இந்த நிர்வாகத்தை யார் நடத்துவது. துணைநிலை ஆளுநர் எல்லா துறைகளின் அதிகாரிகளை அழைத்து கூட்டம் நடத்துகிறார். அதற்கு அவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது.

அதற்கு எதற்கு முதல்வர், துறை அமைச்சர்கள், சட்டப்பேரவை. துணைநிலை ஆளுநர் போட்டி அரசாங்கத்தை நடத்துகிறார். அதனால் தான் அவர் ஆர்எஸ்எஸ், பாஜக கைப்பாவை, பிரதமர் மோடியின் கையாளாக இருக்கிறார் என்று நான் கூறுகிறேன். விதிமுறைகளை மீறி யாரும் செயல்பட முடியாது. அதிகாரிகளை அழைத்து கூட்டம் போட்டு உத்தரவு பிறப்பிப்பது துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லாத ஒரு செயல். அதனால் தான் துணைநிலை ஆளுநர் நிர்வாகத்தில் தலையிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். மாநில முதல்வர் கேட்க வேண்டும்.

தமிழக முதல்வர் விஜய் பிரதமர் வேட்பாளர் என்பது, அந்தந்த கட்சியை சேர்ந்தவர்கள் அவர்களின் தலைவர் முதல்வராக, பிரதமராக, ஆளுநராக, மத்திய அமைச்சாக வர வேண்டும் என்று சொல்வார்கள். அது அக்கட்சியின் தொண்டர்களின் உணர்வு. ஆனால் ஒட்டுமொத்தமாக இண்டியா கூட்டணியில் ராகுல் காந்தி 2029 நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளர் என்பது எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதனால் அவர்களின் தொண்டர்களின் ஆதங்கத்தை சொல்வதை யாரும் மறுக்க முடியாது. இண்டியா கூட்டணி கட்சிகள் அமர்ந்து பேசி முடிவு செய்வது தான் பிரதமர் வேட்பாளர். எங்கள் கட்சி சார்பில் ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர். அந்தந்த கட்சி தொண்டர்கள் சொல்வதை மறுக்கவும், எதிர்க்கவும் முடியாது.

ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக தவெக தலைவர் விஜய் ஏற்றுக்கொள்வார். அமைச்சரவையில் இருந்து வெளியேறுவோம் என்று காங்கிரஸ் அமைச்சர்கள் கூறியிருப்பது அவர்களின் எண்ணம். தங்கள் எண்ணத்தைச் சொல்ல அவர்களுக்கு உரிமை உண்டு. இது ஜனநாயக நாடு. நாங்கள் கூட்டணியில் இருப்பதால் யாருக்கும் அடிமை கிடையாது.” என்று நாராயணசாமி தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply