செங்கல்பட்டில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் – கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம்

Priya
791 Views
2 Min Read

தமிழ்நாடு அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் செவிலியர்களின் நலன்களைப் பாதுகாக்க வலியுறுத்தி, செங்கல்பட்டில் இன்று செவிலியர்கள் ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதுமான செவிலியர்கள் இல்லாததால், பணியில் உள்ள செவிலியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுவதாகவும், இதனால் அவர்களின் பணிச் சுமையை குறைக்கும் வகையில் புதிய செவிலியர் பணியிடங்களை உடனடியாக உருவாக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட செவிலியர் பணியிடங்களை மட்டுமே மறுசீரமைப்பு (Re-deployment) செய்வதை கைவிட்டு, மருத்துவமனைகளின் தேவைக்கேற்ப கூடுதல் பணியிடங்களை உருவாக்க வேண்டும். ஒப்பந்தம் மற்றும் தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வரும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும், செவிலியர் போதகர் (Nursing Tutor) நியமனத்தில் தொலைதூர மற்றும் கிராமப்புற பகுதிகளில் நீண்ட காலமாக பணியாற்றி வரும் செவிலியர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். செவிலியர் அலுவலர் (Nursing Officer) என்ற பதவி பெயர் மாற்றம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

செவிலியர்களின் பணிப்பொறுப்புகள் தெளிவாக வரையறுக்கப்பட்டு, அவர்களுக்கான பணி வரன்முறை (Job Description for Nurses) வழங்க வேண்டும். பணிச்சுமைக்கு ஏற்ப பணியாளர்களை நியமித்து, பாதுகாப்பான பணிச்சூழலை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் முன்வைக்கப்பட்டன.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று (ஆகஸ்ட் 20) முதல் ஆக.22-ம் தேதி வரை தினமும் காலை 8 மணி முதல் 9 மணி வரை ஒரு மணி நேர போராட்டம் நடத்தப்படும் என செவிலியர்கள் தெரிவித்துள்ளனர். போராட்டத்தின்போது நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அவசர சிகிச்சைப் பிரிவு, கேஷுவால்டி, மகப்பேறு அவசர சிகிச்சை மற்றும் அவசர ஊழியப் பிரிவுகள் போராட்டத்தில் இருந்து விலக்கப்பட்டுள்ளன.

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள கோரிக்கைகளுக்கு அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றும், செவிலியர்களின் பணிச்சுமை மற்றும் பணிப் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply