“பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்க வேண்டும். முன்பு விவரம் தெரியாதபோது ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டு வீடுகள், கட்டிடங்கள் கட்டப்பட்டன. இனிமேலும் அதை நாம் செய்யக் கூடாது” என்று சட்டப்பேரவையில் பாமக எம்.எல்.ஏ சவுமியா அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று அவர் பேசுகையில், “தாமிரபரணி ஆற்றில் டன் டன்னாக குப்பைகள் உள்ளன. தாமிரபரணி ஆற்றை சுத்தம் செய்யாமல் அழகுபடுத்தி என்ன பலன்?
நீர்நிலைகளை சரியாக அளவிட்டு மேப்பிங் செய்ய வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் ஏரிகளை தூர்வாற வேண்டும். பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை நாம் பாதுகாக்க வேண்டும்.
நீர்வளம் என்ற மிகப் பெரிய சொத்து நம் கண் முன்னே நம்மை விட்டு சென்றுக்கொண்டிருக்கிறது. எத்தனையோ ஏரி, குளங்கள், ஆறுகள் எல்லாம் காணாமல் போய்விட்டன.
சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை நாம் பாதுகாக்க வேண்டும். இந்த சதுப்பு நிலம் பாதுகாக்கப்பட்டால், அதிகப்படியான வெள்ள நீரையும் நம்மால் சேர்த்து வைக்க முடியும்.
எல்லா ஏரியிலும் அரசுக் கட்டடங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. வள்ளுவர்கோட்டம் ஏரியில்தான் இருக்கிறது. நேரு அரங்கம் எரியில்தான் இருக்கிறது. கோயம்பேடு பேருந்து நிலையம் ஏரியில்தான் இருக்கிறது. புதிதாக கட்டப்பட்ட திண்டிவனம் பேருந்து நிலையமும்கூட ஏரியில்தான் இருக்கிறது. முன்பு விவரம் தெரியாதபோது ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டு வீடுகள், கட்டிடங்கள் கட்டப்பட்டன. இனிமேலும் அதை நாம் செய்யக் கூடாது.
எனவே, தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை பட்டியலிட வேண்டும். 5 ஏக்கருக்கு மேல் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் டிஜிட்டல் மேப்பிங் செய்ய வேண்டும் என்று நீர்வளத் துறை அமைச்சரை நான் இருகரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன்.
தமிழகத்தில் உள்ள நதிகளை முதலில் இணைக்க வேண்டும். காவிரி – குண்டாறு இணைப்பு திட்டத்தை முதலில் செயல்படுத்த வேண்டும். அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தையும் விரைந்து நிறைவேற்ற வேண்டும். நமது ஊரில் இருக்கும் நதிகளை இணைத்து தூர்வாரி கரைகளை பலப்படுத்தினாலே போதும், சட்டவிரோத மணல் திருட்டை குறைத்துவிடலாம்.
கடன் வாங்கிதான் சம்பளம் கொடுக்குறோம். கடன் வாங்கிதான் ரோடு, மருத்துவமனை, மேம்பாலம் என எல்லாவற்றையும் செய்கிறோம். கடன் வாங்கிதான் கடன்களையே அடைக்கிறோம்.
நான் சொன்ன இத்தனை திட்டத்துக்கு ஒரு லட்சம் கோடி தேவைப்படும் என்று தெரியும். கடன் வாங்கியாவது ஏரி திட்டங்களை கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும். நீர்நிலைகளை சீரமைத்தால் விவசாயம் பெருகும், சுகாதாரம் மேம்படும், பொருளாதாரம் உயரும். எனவே இந்தக் கடனை 10 ஆண்டுகளில் அடைத்துவிடலாம் என உறுதியாக சொல்கிறேன்” என்று அவர் கூறினார்.

