அரசு ஊழியர்களுக்கு ‘டேப்ஸ்’ ஓய்வூதியத் திட்டம்: நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி

Priya
640 Views
1 Min Read

அரசு ஊழியர்களுக்கு ‘டேப்ஸ்’ ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் மரியவில்சன் உறுதி அளித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று நடந்த விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் எ.வ.வேலு, ‘‘அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டு வரப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தீர்கள். திமுக அரசு அறிவித்த தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (‘டேப்ஸ்’) தொடருமா அல்லது பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவீர்களா?’’ என கேள்வி எழுப்பினார்.

அதைத்தொடர்ந்து நிதி அமைச்சர் மரியவில்சன் அளித்த விளக்கம் வருமாறு: அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக அமைக்கப்பட்ட கமிட்டி, ‘டேப்ஸ்’ ஓய்வூதியத் திட்டத்தை பரிந்துரை செய்தது.

அதன்படி, அரசு ஊழியர்கள் கடைசியாக பெறும் அடிப்படை சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியம், பணிக்கொடை, குடும்ப ஓய்வூதியம் ஆகியவை பரிந்துரைக்கப் பட்டன. அந்த வகையில் அரசு ஊழியர்களுக்கு ‘டேப்ஸ்’ திட்டம் கண்டிப்பாக செயல் படுத்தப்படும்.

விதிமுறைகள் உருவாக்கம்

தற்போது இடைக்கால ஓய்வூதியம் வழங்கும் பணியை ஆரம்பித்து விட்டோம். ‘டேப்ஸ்’ திட்டத்துக்கான விதிமுறை களும், வழிகாட்டுதல்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன. எனவே, அரசு ஊழியர்களுக்கு ‘டேப்ஸ்’ திட்டம் அமல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக அரசின் நடப்பு பட்ஜெட்டில் ஓய்வூதியத்துக்கு ரூ.14 ஆயிரம் கோடி குறைக்கப்பட்ட நிலையில், ‘டேப்ஸ்’ திட்டம் செயல்படுத்தப்படுமா? இல்லையா? என்ற சந்தேகம் அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

இதுதொடர்பாக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் உள்ளிட்ட சங்கங்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தன.

இந்நிலையில், அரசு ஊழியர்களுக்கு ‘டேப்ஸ்’ திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்பதை அரசு தெளிவுபடுத்தி யுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply