‘தமிழகத்தில் நடைபெறும் அரசு நிகழ்வுகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடக்கூடாது என யாரும் தடுக்கவில்லை’ என தெளிவுபடுத்தியுள்ள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, இதுதொடர்பான வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.
தமிழகத்தில் நடைபெறும் அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை முதலில் பாடி நிகழ்ச்சியை தொடங்குவதை உறுதி செய்யக் கோரி சென்னையைச் சேர்ந்த அனன்யா ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநலவழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், ‘‘தமிழகத்தில் நடைபெறும் அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை முதலிலும், தேசிய கீதத்தை நிறைவாகவும் பாடி நிறைவு செய்வது ஆண்டாண்டுகாலமாக பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்த நடைமுறையை நீர்த்துப்போகச் செய்யும் வகையில், அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலை முதலில் பாடி தொடங்க வேண்டும், அதன்பிறகு தேசிய கீதம் பாட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஜனவரியில் சுற்றறிக்கை பிறப்பித்துள்ளது.
இதில், தமிழ்த்தாய் வாழ்த்து பற்றி குறிப்பிடவில்லை. சில மத்திய அரசு நிகழ்வுகளில் வந்தே மாதரமும், தேசிய கீதம் பாடிய பிறகே தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்படுகிறது. எனவே வந்தே மாதரம் பாடலை முதலில்பாட வேண்டும் என்ற சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும்.
அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடுவதை உறுதிசெய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்’’ எனக் கோரியிருந்தார். இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
மத்திய அரசு தரப்பு பதில் அப்போது மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், ‘‘மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஜூலை 9 அன்று பிறப்பித்துள்ள புதிய அறிவிப்பாணைப்படி வந்தே மாதரம் பாடலை முதலில் பாடி பின்னர் தேசிய கீதம் பாட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த சுற்றறிக்கையில் எங்குமே மாநிலப் பாடலை இறுதியாகத்தான் பாட வேண்டுமென கூறப்பட வில்லை’’ என்றார். அதையடுத்து நீதிபதிகள், ‘‘மத்திய அரசின் புதிய அறிவிப் பாணைப்படி தமிழகத்தில் நடைபெறும் அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடக்கூடாது என யாரும் தடுக்கவில்லை.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபிறகு வந்தே மாதரம் பாடி, இறுதியாக தேசிய கீதம் பாடப்பட்டு அரசு நிகழ்வுகள் முடிக்கப்பட வேண்டும். இதைத்தான் அந்த சுற்றறிக்கையும் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த அடிப்படையில் தான் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட்டு, வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதம் பாடப்பட்டது’’ என தெளிவுபடுத்தினர். பின்னர் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளனர்.

