‘மழை மற்றும் வெயில் உட்பட எதற்கும் கேட்ட நிவாரண நிதியை கொடுக்காமல் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது’ என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
சேலத்தில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;
வெப்பம் அதிகரித்ததால் தமிழகத்தில் ஓட்டுகள் குறைவாக பதிவாகி உள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெறும். நீதிமன்றத்தின் முழு தீர்ப்பு கிடைக்காத போது, தேர்தல் ஆணையம் மீதான வழக்கு குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.
வெப்பம் மற்றும் மழை உட்பட எதற்கும் மாநில அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுப்பதே இல்லை. தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது. காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருக்கும் போது கேட்ட நிதியை கொடுத்தது இல்லை. மாநில அரசின் நிதியில் இருந்து பணத்தை செலவு செய்து விட்டு பற்றாக்குறை ஏற்பட்டால் மத்திய அரசிடம் கேட்டு நிதி பெறலாம்.
அதிமுக ஆட்சியில் இருந்த போதும் கூட நாம் கேட்ட நிவாரண நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை. போதைப்பொருள் கடத்தலில் யார் ஈடுபட்டாலும் கடும் நடவடக்கை எடுக்க வேண்டும். திமுக ஆட்சியில் குறைகள் இல்லாத துறையே இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.