தேர்தல் பிரச்சாரத்தின் போது விதிகளை மீறிப் பேசியது மற்றும் கருத்து தெரிவித்ததாக பிரமர் மோடி மற்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீது கொடுக்கப்பட்ட புகார் தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தக் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.
ராஜஸ்தானில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி சிறுபான்மையினருக்கு எதிராகப் பேசியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினர் தேர்தல் ஆணையத்தில் விதிமீறல் புகாரளித்தனர். இதே போல ராகுல் காந்தி மீதும் பாஜகவினர் சார்பில் புகாரளிக்கப்பட்டது.
இந்த புகாரினைத் தொடர்ந்து பாஜக தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு நோட்டிஸ் அனுப்பி வைத்துள்ள தேர்தல் ஆணையம் இந்த புகார் குறித்து வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் சார்பில் அனுப்பப்பட்ட நோட்டீசில், உயர் பதவிகளை வகிப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும், இதனால் தங்கள் வேட்பாளர்கள் மற்றும் நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சுகளுக்கு சம்பந்தப்பட்ட கட்சிகளே பொறுப்பு ஏற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.