“மிகுந்த நிதி நெருக்கடியிலும் தொலைநோக்கு வேளாண் பட்ஜெட்” – வைகோ பாராட்டு

Priya
11 Views
4 Min Read

‘மிகுந்த நிதி நெருக்கடியில் உள்ள தமிழ்நாடு அரசு வேளாண் துறை வளர்ச்சிக்காக பல புதிய திட்டங்களை அறிவித்திருப்பதும், விவசாயிகளை ஊக்குவிக்க தொலைநோக்குப் பார்வை மற்றும் சாத்தியக் கூறான திட்டங்களை முன்னெடுத்து செல்வதும் வரவேற்கத்தக்கது’ என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தவெக அரசின் முதல் வேளாண் நிதிநிலை அறிக்கை இன்று (06.08.2026) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழ்நாட்டின் உரிமையை பாதுகாப்பதற்கு உறுதியாக இருப்போம் என்று நேற்று (05.08.2026) பொது வரவு செலவுத் திட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இன்று (06.08.2026) வேளாண் வரவு செலவு திட்ட அறிக்கையில் வேளாண் துறையின் வளர்ச்சிக்கு பல புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, ரூபாய் 5.20 கோடி செலவில் தமிழ்நாடு விவசாயிகளின் வருமான மேம்பாட்டு ஆணையம் உருவாக்கப்படும்.

வேளாண் விளை பொருட்களுக்கு 100 சதவீதம் பயிர் காப்பீடு வழங்க முடிவு. கரும்பு சாகுபடி பரப்பை அதிகரிக்க ரூ.9 கோடி மதிப்பீட்டில் கரும்பு சாகுபடி மேம்பாட்டுத் திட்டம். ரூ. 2 கோடி மதிப்பீட்டில் பனை பாதுகாப்பு இயக்கம். ஏஐ உழவர் செயலி – ஒவ்வொரு உழவருக்கும் தனிப்பயன் சேவைகள் வழங்க ஏஐ அடிப்படையிலான உழவர் செயலி உருவாக்கப்பட்டு ஸ்மார்ட் வேளாண்மை குறிப்புகள் வழங்கப்படும்.

அண்ணல் அம்பேத்கர் வேளாண் உதவித் திட்டம் ரூ.56.72 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். வேளாண் துறையில் மகளிரை ஊக்குவிக்க ‘வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம்’ என்ற பெயரில் மாடித் தோட்டம் அமைக்க இடுபொருள் தொகுப்புகள், காய்கறி விதைத் தொகுப்புகள், பழச்செடித் தொகுப்புகள், நீரியல் தோட்டம், செங்குத்துத் தோட்டம், நிழல் வலைக் குடில்கள் வழங்கப்படும்.

தஞ்சை மாவட்டம், சாக்கோட்டையில், ‘நம்மாழ்வார்’ பெயரில் ஒரு புதிய உயிர்ம வேளாண் பட்டயப் படிப்புக் கல்லூரி, திருக்கோவிலூர், முசிறி, காரைக்குடி, தாராபுரம், கும்பகோணத்தில் வேளாண்மைப் பொறியியல் விரிவாக்க மற்றும் பயிற்சி மையங்கள், வேளாண் நுண்ணறிவு மற்றும் சந்தை மகத்துவ மையம் அறிவிக்கப்பட்டுள்ளது.

வான்மகள்’ திட்டம் – 100 மகளிர் உட்பட 500 நபர்களுக்கு ட்ரோன் இயக்க பயிற்சி உரிமம், 50 பயிற்சி பெற்ற மகளிருக்கு 50 சதவீத மானியத்தில் ட்ரோன்கள் வழங்க ரூ.4 கோடி ஒதுக்கீடு, நஞ்சில்லா வேளாண் முறைகளை ஊக்குவித்து, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு சந்தை வாய்ப்புகளை உருவாக்க நீலகிரி மாவட்டம் ஊட்டியில் புதிய வேளாண் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம்,

Advertisement

மதிப்புக் கூட்டுதலை மேம்படுத்த 4 முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள், 2 சிறப்பு வணிக வளாகங்கள் கட்டமைப்பு மேம்பாடு மேற்கொள்ளப்படும்.

ரூ.41 கோடியில் தென்னை சிறப்பு திட்டம், தென்னை டானிக் பூச்சி நோய்களை உயிரியல் முறையில் கட்டுப்படுத்துதல், கரூர் மாவட்டத்தில் தென்னை நாற்றுப் பண்ணை, தமிழ்நாடு தென்னை பதப்படுத்தும் கழகம், கொப்பரைக்கு விலை ஆதரவுத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னை சார்ந்தப் பொருட்களுக்கு லாபகரமான விலை கிடைக்கச் செய்ய ரூ.5.30 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு தென்னை பதப்படுத்தும் கழகம் (TNCPC) அமைக்கப்படவுள்ளது. பயிர் சாகுபடி மற்றும் மதிப்புக் கூட்டுதலுக்கான 50 ஒருங்கிணைந்த வேளாண் இயந்திர வாடகை வணிக மையங்கள் அமைத்தல்.

ஆயிரம் விவசாயிகளுக்கு அதிகபட்ச மானியம் 80% மானியத்தில் மின் கட்டமைப்புடன் சாராத சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் அமைக்க ரூ.23 கோடி ஒதுக்கீடு. வேளாண் இயந்திரங்களைப் பழுது நீக்கி பராமரிக்கும் 15 மையங்கள் அமைத்திட 50% மானியம். இதற்காக ரூ.1.12 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கிராம அளவிலான 50 வேளாண் இயந்திர வாடகை மையங்கள் 80 சதவீத மானியத்தில் அமைக்கப்படும். இதில் மகளிர் சுய-உதவிக் குழுக்களுக்கு 30 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்படும். இதற்காக ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

மாநில அளவில் பயிர் விளைச்சல் போட்டிகள் நடத்தப்பட்டு மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் விருது வழங்கப்படும். 5 விவசாயிகளுக்கு சிறந்த உயிர்ம விவசாயிக்கான நம்மாழ்வார் விருது வழங்கப்படும்.

நெல் (இறவை & மானாவாரி) சோளம், கம்பு, மக்காச்சோளம், துவரை, உளுந்து, பச்சைப்பயறு, நிலக்கடலை மற்றும் பருத்தி குறைந்தது 2 ஏக்கர் சாகுபடி. செய்த விவசாயிகளுக்கு மாவட்ட அளவில் ‘வெற்றி விவசாயி விருது’ வழங்கப்படும். முதல் பரிசு ரூ.50 ஆயிரம், இரண்டாம் பரிசு 25 ஆயிரம் வழங்கப்படும்.

காட்டுப் பன்றிகளால் ஏற்படும் பயிர் இழப்புகளைத் தடுக்க காட்டுப்பன்றி சேதத் தடுப்புத் திட்டம், சூப்பர் எல்நினோவால் தமிழ்நாட்டில் 12 மாவட்டங்கள் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அதன் பாதிப்பை குறைக்க வேளாண் பல்கலைக்கழகம் தயாரித்துள்ள மாவட்ட வாரியான திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மிகுந்த நிதி நெருக்கடியில் உள்ள தமிழ்நாடு அரசு வேளாண் துறை வளர்ச்சிக்காக பல புதிய திட்டங்களை அறிவித்திருப்பதும், விவசாயிகளை ஊக்குவிக்க தொலை நோக்குப் பார்வை மற்றும் சாத்தியக் கூறான திட்டங்களை முன்னெடுத்து செல்வதும் வரவேற்கத்தக்கதாகும்.’ எனத் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply