‘ரேஸர்’ அஜித் முதல் ‘ஜனநாயகன்’ வரை: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு விதவிதமான பேனர்கள்!

Priya
366 Views
2 Min Read

தமிழ் கடவுள் முருகன் தொடங்கி ‘ஜனநாயகன்’ – தமிழக முதல்வர் விஜய் மாடல் வரை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை வடிவமைத்து என்.ஆர்.காங்கிரஸ் தொண்டர்கள் பேனர்கள் வைத்துள்ளனர்.

கடந்த 1950 ஆகஸ்ட் 4-ம் தேதி பிறந்தவர் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி. நடிகர் சிவாஜியின் தீவிர ரசிகர். இளம் வயதில் காமராஜருக்கு மன்றம் நிறுவினார். ஆண்டுதோறும் முதல்வர் ரங்கசாமியின் பிறந்தநாளை என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகளும், தொண்டர்களும், ஆதரவாளர்களும் கொண்டாடுவது வழக்கம்.

என்டிஏ ஆட்சியில் மீண்டும் இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்து மீண்டும் ரங்கசாமி முதல்வராகி உள்ளார். புதுச்சேரியில் அதிக ஆண்டுகள் முதல்வராக இருப்பவர் ரங்கசாமி தான். இம்முறை சிறப்பாக அவரது ஆதரவாளர்கள் பிறந்தநாளை கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.

இதையொட்டி கோயில்களில் சிறப்பு பூஜை, அன்னதானம், மரகன்றுகள் நடுதல், மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், ரத்த தான முகாம் என பல்வேறு பணிகளை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

அதற்கு முன்னோட்டமாக நகரின் பல்வேறு பகுதிகளில் ரங்கசாமிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வண்ணம் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் பேனர்கள், கட்—அவுட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

வழக்கமாக அரசியல் கட்சி தலைவர்களை தொண்டர்கள் அவருடைய படங்களை மட்டுமே பேனர்களில் பயன்படுத்தி வாழ்த்து தெரிவிப்பது உண்டு.

ஆனால், புதுவை முதல்வர் ரங்கசாமியை அவரது கட்சி தொண்டர்களும், ஆதரவாளர்களும் தங்கள் விருப்பம் போல் திரைப்பட நடிகர்கள் உருவங்கள் தொடங்கி தமிழ் கடவுள் முருகன் வரை பேனர்கள் அமைத்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக விஜய், அஜித், சூர்யா முகத்துக்கு பதிலாக ரங்கசாமி முகத்தை வைத்து பல திரைப்படப் பாணியில் பேனர்களை வடிமைத்துள்ளனர்.

ஜனநாயகன் பட பாணி தொடங்கி தமிழக முதல்வராக விஜய் அணியும் கோட் சூட் மாடல் வரை ரங்கசாமியை வடிவமைத்துள்ளனர்.

கார் ரேஸசராக அஜித் மாடலிலும், கருப்பு பட ஸ்டைலிலும் தொடங்கி பல திரைப்படங்களில் பேனர்கள் வைத்துள்ளனர்.

உச்சக்கட்டமாக இம்முறை தமிழ் கடவுள் முருகன் பாணியில் அதிக பேனர்களையும் ரங்கசாமியை வைத்து வடிமைத்துள்ளனர்.

முக்கியமாக ரங்கசாமிக்கு டென்னிஸ் மிகவும் பிடிக்கும் என்பதால் கிரிக்கெட், டென்னிஸ், கால்பந்து தொடங்கி பல வீரர்கள் பாணியிலும் பேனர்கள் அதிகம் இடம் பெற்றுள்ளன.

என்.ஆர்.காங்கிரஸ் தொண்டர்கள் பலரும் தற்போது டிரண்டில் உள்ள நடிகர்கள், திரைப்படங்கள் பாணியில் எங்களுக்கு விருப்பப்பட்ட நடிகர்கள் ஸ்டைலில் ரங்கசாமியை இம்முறை ஸ்டைலாக வடிவமைத்துள்ளோம் என்கின்றனர் ஆர்வமாக.

புதுச்சேரியை அழகுப்படுத்தும் நோக்கில் போஸ்டர் பேனர்கள் போன்றவை வைக்க கடந்த 2009-ல் தடை விதிக்கப்பட்டது. இதனை இம்முறையும் கண்டுகொள்ளவில்லை.

முக்கியமாக சாலை திருப்பங்கள், குறுகலான பகுதிகளில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் பேனர்களையாவது வைக்காமல் தவிர்க்கலாம் என்கின்றனர் பொதுமக்கள்.

Share This Article
Leave a Comment

Leave a Reply