‘ஜனநாயகன்’ திரை விமர்சனம்

Priya
1901 Views
6 Min Read

தமிழ் திரையுலகில் ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தவிர்க்க முடியாத வசூல் சக்கரவர்த்தியாகவும், கோடி கணக்கான மக்களின் மனங்களை வென்ற என்டர்டெயினராகவும் திகழ்ந்தவர் நடிகர் விஜய். தற்போது தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சூழலில், அவரது கடைசித் திரைப்படமாக உருவெடுத்துள்ள Jananayagan திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்யத் திட்டமிடப்பட்ட இத்திரைப்படம், அடுத்தடுத்துச் சந்தித்த சென்சார் சிக்கல்கள், இணையத்தில் படம் லீக் ஆன அதிர்ச்சி சம்பவம் மற்றும் ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டது எனப் பல்வேறு தடைகளைக் கடந்து ஒருவழியாக வெள்ளித்திரைக்கு வந்துள்ளது. முப்பதாண்டு காலத் திரைப்பயணத்திற்குப் பிரியாவிடை கொடுக்கும் வகையிலான இந்த ஜனநாயகன் திரைப்படம் விஜய் ரசிகர்களுக்கும், பொதுவான சினிமாப் பார்வையாளர்களுக்கும் எந்த அளவிலான திரை அனுபவத்தைத் தந்துள்ளது என்பதை விரிவாகப் பார்ப்போம்.

மதுரை மத்தியச் சிறையில் கைதியாக இருக்கும் தளபதி வெற்றிகொண்டானை (விஜய்) அறிமுகப்படுத்துவதோடு கதைக்களம் மிகவும் தீவிரமாகத் தொடங்குகிறது. உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் வெற்றிகொண்டானின் தாய் (ரேவதி), தனது மகனைக் கடைசி முறையாகப் பார்க்க வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படுத்துகிறார். அந்த மனிதநேய கோரிக்கையை ஏற்றுக் கொள்ளும் சிறைக் கண்காணிப்பாளர் ஸ்ரீகாந்த் (கவுதம் வாசுதேவ் மேனன்), அரசு விதிமுறைகளைச் சற்றே மீறி வெற்றிகொண்டான் தன் தாயைச் சந்தித்து வர ஏற்பாடு செய்கிறார். இதன் காரணமாகப் பணி இடைநீக்கம் (Suspension) செய்யப்படும் ஸ்ரீகாந்த், வரும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினப் பொது மன்னிப்பில் வெற்றிகொண்டான் சிறையிலிருந்து முழுமையாக விடுதலை பெறவும் அனைத்து உதவிகளையும் செய்கிறார்.

விடுதலையான பிறகு, வெற்றிக்கும் ஸ்ரீகாந்தின் அன்பு மகள் விஜிக்கும் (மமிதா பைஜூ) இடையே ஒரு ஆழமான தந்தை-மகள் போன்ற பாசப் பந்தம் உருவாகிறது. எதிர்பாராதவிதமாக ஸ்ரீகாந்த் ஒரு சாலை விபத்தில் உயிரிழக்க, விஜியின் பாதுகாவலனாக மாறும் முழுப் பொறுப்பையும் வெற்றி ஏற்றுக்கொள்கிறார். தனது தந்தையின் லட்சியமான ராணுவ அதிகாரி கனவை விஜி எட்ட வேண்டும் என்பதற்காக, அவருக்கு அனைத்து வழிகளிலும் துணையாக நின்று வெற்றிப் போராடுகிறார்.

மறுபுறம், ஆப்பிரிக்காவில் தலைமறைவாக இருக்கும் ஜான் ஹிம்லர் (பாபி தியோல்) என்ற சர்வதேசக் குற்றவாளி, இந்தியாவில் உள்ள குறிப்பாகத் தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களையும் அரசாங்கத்தையும் தனது அதிகாரப் பிடிக்குள் வைத்து ஆட்டிப்படைக்கிறான். எதிர்பாராத சில சூழல்களில், வெற்றியின் வளர்ப்பு மகளான விஜி, ஹிம்லரின் பிரம்மாண்ட சதித்திட்டத்திற்கு குறுக்கே வர நேரிடுகிறது. இது வெற்றிக்கும் சர்வதேசக் குற்றவாளி ஹிம்லருக்கும் இடையே நேரடி மோதலை உருவாக்குகிறது. இறுதியில், வெற்றி தனது மகளின் ராணுவக் கனவை நிறைவேற்றினாரா, ஹிம்லரின் சர்வதேசச் சதியை முறியடித்தாரா என்பதுதான் ஜனநாயகன் படத்தின் மீதிக் கதையாகும்.

இத்திரைப்படம் தொடங்கப்பட்ட சில மாதங்கள் வரை, இது தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியாகிப் பெரிய ஹிட் அடித்த ‘பகவந்த் கேசரி’ திரைப்படத்தின் ரீமேக் என்ற தகவலைப் படக்குழுவினர் வெளிப்படையாக அறிவிக்காமல் மௌனம் காத்து வந்தனர். ஆனால், நாளடைவில் இதைப் பற்றிய செய்திகள் இணையத்தில் கசியத் தொடங்கியதும், “இது அப்பட்டமான ரீமேக் அல்ல, கதையின் மையக்கரு மட்டுமே எடுக்கப்பட்டு தமிழ் சூழலுக்கு ஏற்ப ஒரிஜினலாக உருவாக்கப்பட்டுள்ளது” என்று படக்குழுவினர் விளக்கமளித்தனர்.

ஆனால், திரையரங்கில் படம் தொடங்கிய முதல் ஃபிரேமிலிருந்து இடைவேளை வரை சீன் பை சீன் இது ‘பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக் என்பதை அப்பட்டமாகவே உறுதி செய்கிறது. இரண்டாம் பாதியில் க்ளைமாக்ஸை நெருங்கும் போது மட்டுமே சில மாற்றங்களை இயக்குநர் செய்துள்ளார். மற்றபடி தெலுங்கு சினிமாவுக்கே உரித்தான 100% ஹெவியான மசாலா நெடி ஜனநாயகன் படம் முழுவதும் நிறைந்து காணப்படுகிறது.

படத்தின் தொடக்கத்தில் வரும் சிறைச் சண்டைக் காட்சியில் ஆரம்பிக்கும் ஒருவித செயற்கைத்தனம் க்ளைமாக்ஸ் வரை நீடிக்கிறது. கதாநாயகனின் டயலாக் டெலிவரி, அவரைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள ‘கேஜிஎஃப்’ பாணி பில்டப் காட்சிகள் மற்றும் ஒட்டாத திரைக்கதை அமைப்பு ஆகியவை ரசிகர்களைச் சற்றே சோதிக்கின்றன. இருப்பினும், இடைவேளைக் காட்சியில் திரைக்கதை சூடுபிடிக்கத் தொடங்குகிறது. விஜய்யின் அபாரமான திரை ஆளுமையும், அனிருத்தின் வெறித்தனமான பின்னணி இசையும் சேர்ந்து அந்த சண்டைக் காட்சியை ஒரிஜினல் தெலுங்குப் படத்தை விடவும் பல மடங்கு உயர்த்திப் பிடிக்கின்றன. ஆனால், அந்த ஒரு காட்சியைத் தவிரக் குறிப்பிட்டுச் சொல்லும்படியோ அல்லது நினைவில் வைத்துக் கொள்ளும்படியோ படத்தில் வேறு காட்சிகள் அமையாமல் போனது மிகப்பெரிய துயரமாகும்.

கதாநாயகனுக்குக் கொடுக்கப்படும் அதிகப்படியான பில்டப் காட்சிகளே இந்தத் திரைக்கதையின் முதன்மை வில்லனாக மாறிப்போயுள்ளன. ஒரு கைதிக்குக் காவல் துறை அதிகாரி பில்டப் கொடுப்பது போன்ற காட்சிகள் எல்லாம் எந்தக் கோணத்தில் யோசித்தாலும் பார்வையாளர்களுக்குச் செட்டாகவில்லை. தெலுங்குப் படத்தை ஒரு தெலுங்கு ரசிகரின் மனநிலையிலிருந்து பார்த்தால் மட்டுமே ரசிக்க முடியும் என்ற நிலையில், அதை அப்படியே தமிழுக்கு ரீமேக் செய்து கொடுத்திருப்பது பெரிய வரவேற்பைப் பெறவில்லை.

தமிழின் உள்ளூர் அடையாளத்திற்காகப் படத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, ஒரு காட்சியில் வில்லனின் வீட்டிற்குச் செல்லும் விஜய், அங்கிருக்கும் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் புகைப்படத்தைக் கடந்து செல்வார். அப்போது படத்தில் இருக்கும் எம்.ஜி.ஆர் உருவம் விஜய்யைப் பார்த்து, “தங்கமே தளபதி” என்று கூறி ஒரு சாட்டையைக் கொடுப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இத்தகைய ‘கிரிஞ்ச்’ பாணி மாற்றங்கள் தமிழ் ரசிகர்களிடையே சிரிப்பையே ஏற்படுத்துகின்றன.

படம் முழுவதும் கதைக்குப் பெரிய தொடர்பே இல்லாத மறைமுகமான மற்றும் நேரடியான அரசியல் வசனங்கள் ஏராளமாகத் திணிக்கப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் இவை ரசிகர்களால் ரசிக்கப்பட்டாலும், போகப்போக அளவுக்கு மீறிய ஓவர்டோஸாக மாறிச் சலிக்க வைக்கின்றன. இரண்டாம் பாதியில் வரும் ‘குட் டச் – பேட் டச்’ பற்றிய விழிப்புணர்வுக் காட்சியின் நோக்கம் உயர்ந்ததாக இருந்தாலும், அது உணர்வுபூர்வமாகப் பார்வையாளர்களின் மனதைத் தொடத் தவறிவிடுகிறது. ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் இந்தி ‘பிங்க்’ படத்தை நேர்த்தியாகத் தமிழுக்கு மாற்றிய இயக்குநர் எச்.வினோத், இந்த ஜனநாயகன் திரைப்படத்தில் ஒரு இயக்குநராக அந்த வாய்ப்பை முற்றிலுமாக நழுவவிட்டுள்ளார் என்றே சொல்ல வேண்டும்.

இவ்வளவு பலவீனங்கள் இருந்தபோதிலும், இந்த ஜனநாயகன் படத்தை இறுதிவரை திரையரங்கில் அமர்ந்து பார்க்க வைக்கும் ஒரே முதன்மையான காரணம் விஜய் மட்டுமே. ஆக்‌ஷன் காட்சிகளிலும் மாஸ் காட்சிகளிலும் வழக்கம் போல் பொறி பறக்க விட்டுள்ளார். எவ்வளவு பலவீனமான படமாக இருந்தாலும், தனது தனிப்பட்ட திரை ஆளுமையால் (Screen Presence) ரசிகர்களைக் கட்டிப்போடும் கலை தனக்குக் கைவந்த கலை என்பதை மீண்டும் ஒருமுறை விஜய் நிரூபித்துள்ளார். முப்பது ஆண்டுகாலம் மகிழ்வித்த ஒரு கலைஞனை இனி வெள்ளித்திரையில் பார்க்க முடியாது என்ற வேதனை பல காட்சிகளில் ரசிகர்களின் மனதில் எட்டிப் பார்ப்பதைத் தவிர்க்க முடியவில்லை.

நாயகி மமிதா பைஜூவுக்குத் திறமையை வெளிப்படுத்தக் கனமான கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது, அதை அவர் குறைகளின்றி நேர்த்தியாகச் செய்துள்ளார். பூஜா ஹெக்டே வழக்கம்போல ஹீரோவுக்குத் துணையாக வரும் கதாபாத்திரத்தில் வந்து சென்றுள்ளார். மாஸ் வில்லனாக அறிமுகமாகும் பாபி தியோல், போகப்போக காமெடி வில்லனாக மாறிப்போவது படத்தின் முக்கியப் பலவீனமாகும். கவுதம் மேனன், பிரகாஷ் ராஜ், ரேவதி மற்றும் பிரியாமணி ஆகியோர் காட்சிகளை நிரப்ப மட்டுமே பயன்பட்டுள்ளனர்.

தொழில்நுட்ப ரீதியாகப் படத்தின் மறைமுக கதாநாயகன் அனிருத் என்று தாராளமாகச் சொல்லலாம். விஜய்க்கு இணையான உழைப்பைத் தனது பின்னணி இசையிலும் பாடல்களிலும் அனிருத் கொடுத்துள்ளார். பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே ஹிட்டானதால் தியேட்டரில் ‘பிளாஸ்ட்’ ஆகிறது. சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு கமர்ஷியல் மசாலா படத்திற்குத் தேவையான அழகியலை நிறைவாகத் தந்துள்ளது.

மொத்தத்தில், தங்கள் நாயகனைத் திரையில் பார்த்தாலே போதும் என நினைக்கும் முதல் நாள் தீவிர ரசிகர்களுக்கு இந்த ஜனநாயகன் ஒரு வாழ்நாள் கொண்டாட்டமாக இருக்கலாம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply