‘ஜனநாயகன்’ ரிலீஸ் கொண்டாட்டத்தை முன்வைத்து தவெக அரசு மீது பழனிசாமி விமர்சனம்

Priya
17 Views
1 Min Read

“நாடும் நாட்டு மக்களும் எக்கேடாய் போனால் என்ன என்று ‘பிளாஸ்ட் பிளாஸ்ட்’ கொண்டாட்டத்தில் திளைக்கும் புதிய நீரோ (Nero) அரசுக்கு எனது கடும் கண்டனம்” என்று முதல்வர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸை முன்வைத்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 68 வயது பெண்ணின் கால் விரலை எலிகள் கடித்துக் குதறியதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளை இன்றைய ஆட்சி எப்படி வைத்திருக்கிறது என்பதற்கு இந்தச் செய்தியே சாட்சி. அரசை நம்பி சிகிச்சை பெற வந்து, எலி கடித்து கால் விரல் இழந்துள்ள அந்த பெண்ணுக்கு என்ன பதில் வைத்துள்ளது இன்றைய தவெக அரசு?

இப்படி மக்கள் திண்டாடிக் கொண்டிருக்க, இந்தத் துறையின் அமைச்சரோ, ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் காட்சி பார்த்து கொண்டாடி செல்ஃபி பதிவிட்டுக் கொண்டிருக்கிறார்.

அவர் மட்டுமல்ல, இன்றைய தினம் முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை அனைவரும் படம் பார்க்க ‘லீவு’ போட்டிருப்பதாக வேறு செய்திகள் வருகின்றன. ‘நாடும் நாட்டு மக்களும் எக்கேடாய் போனால் என்ன?’ என்று ‘பிளாஸ்ட் பிளாஸ்ட்’ கொண்டாட்டத்தில் திளைக்கும் புதிய நீரோ (Nero) அரசுக்கு எனது கடும் கண்டனம்.

உடனடியாக பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிப்பதுடன், அவருக்கான இழப்பீடும் வழங்க வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்” என்று பழனிசாமி பதிவிட்டுள்ளார்.

மேலும், அதிமுக ஐடி விங் தனது எக்ஸ் தள பக்கத்தில், ’எங்களுக்கு ‘ஜனநாயகன்’ வேண்டாம். ஜனநாயகம் வேண்டும். போராடும் மக்களை அவதூறாக பேசி குண்டுகட்டாக கைது செய்வதுதான் ஜனநாயகமா? வீதியில் இறங்கி மக்கள் போராடும் நிலையில் மக்களோடு நிற்க வேண்டிய ஜனநாயகன் எங்கே போனார்? பதில் இருக்கிறாதா?’ என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 

Share This Article
Leave a Comment

Leave a Reply