தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதன் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் தனித்தனி கூட்டணியாகவும் நாம் தமிழர் தனித்தும் போட்டியிடுகிறது.
பாமக யாருடன் கூட்டணி வைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்கள் பாஜகவுடன் கூட்டணி வைப்பதாக அறிவித்தது. இதையடுத்து பாஜக கூட்டணியில், பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. காஞ்சிபுரம், அரக்கோணம், தருமபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய தொகுதிகள் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
அதற்கான வேட்பாளர் பட்டியலை பாமக இன்று அறிவித்தது. பாமக வேட்பாளர்கள் விவரம்:
திண்டுக்கல் – திலகபாமா அரக்கோணம் – வழக்கறிஞர் கே.பாலு, ஆரணி – முனைவர் அ.கணேஷ் குமார் கடலூர் – திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான் மயிலாடுதுறை – ஸ்டாலின், கள்ளக்குறிச்சி – இரா. தேவதாஸ் உடையார் தருமபுரி – அரசாங்கம் சேலம் – ந. அண்ணாதுரை விழுப்புரம் – முரளி சங்கர்.
காஞ்சிபுரம் லோக்சபா தொகுதிக்கான வேட்பாளர் மட்டும் இன்னமும் அறிவிக்கப்படவில்லை. இந்த மக்களவைத் தொகுதியில் தருமபுரியில் பாமக வேட்பாளராக அன்புமணி ராமதாஸ் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. பாமக சார்பில் கடலூர் தொகுதியில் இயக்குநர் தங்கர்பச்சான் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பத்திரக்கோட்டையில் பிறந்தவர் தங்கர்பச்சான். விவசாய குடும்பத்தில் பிறந்தவர். தாய் தந்தைக்கு 9ஆவதாக பிறந்தவர். தங்கர் பச்சானின் தந்தை தெருக் கூத்துக் கலைஞராக இருந்தவர். பல்வேறு திரைப்படங்களில் தங்கர் பச்சான் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். அழகி திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான தங்கர் பச்சான் , 9 ரூபாய் நோட்டு, பள்ளிக்கூடம், சொல்ல மறந்த கதை, அம்மாவின் கைப்பேசி, களவாடிய பொழுதுகள் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
பொதுவாக தமிழ் சினிமாவில் தென்தமிழகம், கொங்கு பகுதியையே மையமாக கொண்டு எடுக்கப்பட்ட நிலையில் வட தமிழக மக்களையும் அவர்களின் வாழ்வியலையும் மையப்படுத்தி திரைப்படங்களை எடுத்து வருகிறார் தங்கர் பச்சான். விவசாயத்திற்கு ஆதரவான தனது கருத்துகளை தொடர்ந்து தெரிவித்து வரும் தங்கர் பச்சானை பாமக கடலூர் வேட்பாளரா களமிறக்கிய நிலையில் அந்த தொகுதி நட்சத்திர அந்தஸ்தை பெற்றது. இவர் ஆரம்ப கால கட்டத்தில் இருந்தே பாமகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தவர். தமிழ் பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரில் தங்கர்பச்சான், சீமான், ராமதாஸ், திருமாவளவன் உள்ளிட்டோர் தொடங்கிய அமைப்பிலும் தங்கர் பச்சான் தனது பங்களிப்பை ஆற்றியுள்ளார். கடலூர் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் பாமக வேட்பாளர் தங்கர் பச்சான், திமுக சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ்.அழகிரியும் (அழகிரிதான் அறிவிக்கப்படுவார்), போட்டியிடுகிறார்கள். அதிமுக கூட்டணியில் தேமுதிக போட்டியிடுகிறது. தேமுதிக சார்பில் பண்ருட்டி முன்னாள் எம்எல்ஏ சிவக்கொழுந்து போட்டியிடுவார் என தெரிகிறது. மூன்று பேருக்கும் போட்டி கடுமையாக இருக்கும் என்றே தெரிகிறது.