மருத்துவ வரலாற்றைக் காட்டும் ‘சுகாதாரக் கணக்கு’ – அரசு மருத்துவமனைகளில் பொதுமக்கள் தொடங்கலாம்

Priya
99 Views
1 Min Read

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் திட்டத்தின்கீழ் சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பு (எச்எம்ஐஎஸ்) செயல்படுகிறது.

இதன்மூலமாக நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் சிகிச்சை விவரங்கள் சேகரித்து வைக்கப்படுகின்றன.

இந்த தகவல் அமைப்பில், நோயாளிகளின் விவரங்களை சேகரிக்காத 203 மருத்துவமனைகளின் பட்டியலை தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில், தமிழகத்தில் 25 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் இடம்பெற்றுள்ளன.

நோயாளிகளுக்கு, ‘ஆயுஷ்மான் பாரத்சுகாதாரக் கணக்கு’ (ஆபா ஐடி) உருவாக்கி, அவர்களது சிகிச்சை விவரங்களை சேகரிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்கு ஆதார் எண் கட்டாயம் ஆகும்.

அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளிடம் ஆதார் எண் கேட்பதில் சில பிரச்சினைகள் இருப்பதாக மருத்துவமனைகள் தரப்பில் கூறப்படுகிறது. இதுகுறித்து அரசு மருத்துவமனை அதிகாரிகள் கூறியதாவது: தனியார் மருத்துவமனைகளில் ஆதார் எண் போன்றவற்றை கேட்டால் நோயாளிகள் எந்த ஆட்சேபமும் தெரிவிக்காமல் உடனே கொடுக்கின்றனர்.

அரசு மருத்துவமனைகளில் கேட்டால், ஆதார் இருந்தால்தான், சிகிச்சை அளிப்பீர்களா? என்று கேட்கின்றனர். எந்த ஆவணங்களும் இல்லாத நோயாளிகளுக்கும் அரசு மருத்துவமனைகளில் உயிர்காக்கும் சிகிச்சை அளித்து காப்பாற்றிவருகிறோம்.

மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள சுகாதாரக் கணக்கு முறை நோயாளிகளுக்கு வாழ்நாள் முழுதும் பயனளிக்கக் கூடியது. ஒருமுறை இந்த ஐடியை உருவாக்கினால், அதன்பிறகு, நாட்டில் எந்த மருத்துவமனைக்குச் சென்றாலும், அங்கு தங்களது செல்போன் எண்ணை மட்டும் கொடுப்பதன் மூலமாக, அதுவரை அவர்கள் பெற்ற முழு மருத்துவ சிகிச்சை விவரங்களையும் அங்குள்ள மருத்துவர் தெரிந்து கொள்ள முடியும்.

கடந்த காலங்களில் அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை, அவர்கள் சாப்பிடும் மருந்து, மாத்திரைகள் ஆகிய விவரங்களையும் அறிந்து, அதற்கேற்ப சிகிச்சை அளிக்கலாம்.

எனவே, அரசு மருத்துவமனைகளில்புறநோயாளிகள் சீட்டு வாங்கும்போது, ஆதார், செல்போன் எண் கொடுத்து ஆயுஷ்மான் பாரத்சுகாதாரக் கணக்கை உருவாக்கிக் கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply