பள்ளி, கல்லூரிகள் அருகே போதைப்பொருட்கள் விற்பனை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. போதைப்பொருட்களை கட்டுப்படுத்த திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பது வேதனையானது.
வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று ஏற்கனவே திட்டவட்டமாக அறிவித்துவிட்டோம் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அதிமுக மகளிர் அணி சார்பில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் உருவசிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செய்த பின்னர் 76 கிலோ எடையிலான கேக் வெட்டி கொண்டாடினார்.
இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்: பள்ளி, கல்லூரிகள் அருகே போதைப்பொருட்கள் விற்பனை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. போதைப்பொருட்களை கட்டுப்படுத்த திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பது வேதனையானது. தமிழ்நாடு போதைப்பொருள் கிடங்காக மாறிவிட்டதாக மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. டெல்லியில் பிடிபட்ட போதைப்பொருள் கடத்தலில் திமுகவின் ஜாபர் சாதிக் என்பவருக்கு தொடர்புள்ளது என்பது தெரியவந்துள்ளது. அவர் மீது 26 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
26 வழக்குகள் உள்ள ஒரு நபர் காவல்துறை டிஜிபியை சந்தித்து பரிசு பெறுகிறார். போலீஸ் அதிகாரியுடன் தொடர்பு வைத்துக்கொண்டு போதைப்பொருட்களை ஜாபர் சாதிக் கடத்தியுள்ளார். போதைப்பொருளை விற்போர் கைது செய்யப்படவில்லை. காவல்துறையின் கைககள் கட்டப்பட்டுள்ளன. ஜாபர் சாதிக் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் முழு விளக்கமளிக்க வேண்டும் என்றார்.
முக்கியமாக பிரச்சனையில் முதல்வர் பதிலளிக்காமல் ஆர்.எஸ்.பாரதி மூலம் பதிலளித்துள்ளார். போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த எடுக்கவில்லை என்றால் ஆளுநரை சந்தித்து மனு அளிப்போம் என்றார். மேலும் பேசுகையில் திமுக ஆட்சியில் பத்திரிக்கையாளர்கள் சுதந்திரமாகவும், நலமாகவும் இருக்கிறீர்களா? கூட்டணி என்பது அந்தந்த தேர்தல் காலத்திற்கு ஏற்ப அமையும். பாஜக வாக்குசதவீதம் தமிழகத்தில் உயர்ந்துள்ளது என்பதை மக்களிடம் போய் கேட்டால் தான் தெரியும். வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று ஏற்கனவே திட்டவட்டமாக அறிவித்துவிட்டோம். 2 கோடி தொண்டர்களின் உணர்வு பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை மீண்டும் மீண்டும் தெளிவுப்படுத்தி வருகிறோம்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அத்தியாவசிய பொருட்களின் விலை அனைத்தும் உயர்ந்துள்ளது. இந்த சூழலில் தமிழ்நாட்டு மக்களை நலமா என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்பது சரியா? போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து மார்ச் 12ம் தேதி மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.