புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் அடிப்படை மருந்துகளின் விலைகளை உயர்த்த ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. இது மனசாட்சி இல்லாத மற்றும் கருணையில்லாத செயல் என பல்வேறு தரப்பினரும் கடுமையாக விமர்சித்துள்ளனர். புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் இரண்டு அடிப்படை மருந்துகள் உட்பட 4 முக்கிய மருந்துகளின் விலைகளை உயர்த்த ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. பிளாட்டினம் அடிப்படையிலான இரண்டு புற்றுநோய் ஊசி மருந்துகள் பொதுவாக நோயாளிகளுக்கு சிகிச்சையின்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
ஆனால் கடந்த சில நாட்களாக இந்த மருந்துகளின் தட்டுப்பாடு அதிகமாக உள்ளதாக புற்றுநோய் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், தட்டுப்பாட்டை நீக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்த்தால், இந்த மருந்து உட்பட 4 முக்கிய மருந்துகளின் விலைகளை உயர்த்த அனுமதி வழங்கியுள்ளது. இதனால் புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படும் மருந்துகளின் விலைகள் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
நியாயப்படி பார்த்தால் மிகவும் கொடூரமான நோயான புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படும் மருந்துகளின் விலைகளை ஒன்றிய அரசு குறைத்திருக்க வேண்டும். ஆனால் மனசாட்சியே இல்லாமல், கருணையே இல்லாமல் விலைகளை உயர்த்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் புற்றுநோய் சிகிச்சை மருந்துகள் மீதான விலை உயர்வு அனுமதியை உடனே திரும்பப் பெற வேண்டும் என்றும் ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளனர்.

