அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் கட்டணமில்லாமல் சிகிச்சை அளிப்பதை உறுதி செய்ய உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

Priya
32 Views
2 Min Read

தமிழகத்தில் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு கட்டணம் இல்லாமல் சிகிச்சை அளிப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்தவர் ரவி. காவல் துறையில் தலைமைக் காவலராக பணிபுரிகிறார். இவர் மதுரை தனியார் மருத்துவமனையில் இதய பாதிப்புக்காக மாநில அரசின் புதிய சுகாதார காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை பெற்றார். சிகிச்சைக்கு ரூ.3.73 லட்சம் செலவானது. இதில் ரூ.1.01 லட்சத்தை மட்டுமே காப்பீட்டு நிறுவனம் வழங்கியது. இதையடுத்து சிகிச்சைக்கான செலவில் ரூ.2.72 லட்சத்தை திரும்ப வழங்க காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவிடக்கோரி ரவி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்து நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ள நோய்க்கு, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோதிலும் கணிசமான தொகையை தனது சொந்தப்பணத்தில் இருந்து செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு நலத்திட்டங்களைச் சென்றடையச் செய்யும் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு திட்டத்தின் கீழ் தங்களுக்கு உறுதியளிக்கப்பட்ட சலுகைகளைப் பெறுவதற்காக நீதிமன்றங்களை நாட வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுவது மிகுந்த கவலைக்குரிய விஷயமாகும்.

ஊழியர்களின் நலனுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஒரு திட்டம், அதன் நோக்கத்தை அடையத் தவறும்பட்சத்தில் அரசு மவுனமாக இருக்கக் கூடாது. இத்திட்டத்தின் அடிப்படை வாக்குறுதி கட்டணம் செலுத்தாமல் சிகிச்சை என்பதுதான். இருப்பினும் திட்டத்தில் உள்ள குறைபாடுகளால் ஊழியர்கள் சொந்தப் பணத்தை இழக்க வேண்டியுள்ளது.

அரசு ஊழியர்கள் நலனுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்போது, சிகிச்சை செயல்முறையின் ஒவ்வொரு கட்டத்திலும் கட்டணம் இல்லாமல் சிகிச்சை வழங்கும் நோக்கம் மற்றும் குறிக்கோள் உறுதி செய்யப்பட வேண்டும். பயனாளிகள் தங்கள் சொந்தப் பணத்திலிருந்து செலவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படாதவாறு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

எதிர்காலங்களில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களில், தேவைக்கேற்ப தவணைத் தொகைகளை உயர்த்துவதுடன், காப்பீட்டுத் தவணைத் தொகையின் ஒரு பகுதியை தானே செலுத்துவதன் மூலம் அரசு தனது பங்களிப்பை மேம்படுத்த வேண்டும் என நீதிமன்றம் எதிர்பார்க்கிறது.

இது தொடர்பாக அரசு ஊழியர் சங்கங்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருடனும் கலந்தாலோசித்து, மாநிலத்தின் நிதி நிலையை கருத்தில் கொண்டும் முடிவெடுக்கலாம். பேக்கேஜ் கட்டணங்களை பொதுவெளியில் வெளியிட வேண்டும்.

இத்திட்டத்தில் அதிகபட்ச கட்டண வரம்பு, அனுமதிக்கப்பட்ட மருத்துவச் செலவுகளை கணக்கில் கொள்ளப்பட வேண்டும். மனுதாரருக்கு கூடுதல் மருத்துவச் செலவை மாநில அளவிலான குழு பரிசீலித்து 3 மாதங்களில் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply