அண்மையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை 29 ரூபாய் உயர்த்தப்பட்டது. தற்போது அடுத்த அதிரடி அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அண்மையில் வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விலை 29 ரூபாய் உயர்த்தப்பட்டது. இது சாமானிய மக்கள் மீதான அழுத்தத்தை அதிகரித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் 14.2 கிலோ எல்பிஜி சிலிண்டர்களின் விலையில் இது இரண்டாவது விலை உயர்வாகும். சிலிண்டர் விலை உயர்வுக்குப் பிறகு, பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) திட்டத்தின் பயனாளிகளுக்கும் மத்திய அரசு ஒரு பெரும் அடியைக் கொடுத்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் மானிய விலையில் வழங்கப்படும் சிலிண்டர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின்படி, இனிமேல், பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்ட பயனாளிகளுக்கு இனி ஆண்டுக்கு 4 சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
முன்பு 9 சிலிண்டர்களுக்குப் பதிலாக இப்போது 4 சிலிண்டர்களுக்கு மட்டுமே மானியம் வழங்கப்படும். பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ், பயனாளிகள் ஆண்டுக்கு 9 மானிய விலையிலான எல்பிஜி சிலிண்டர்களைப் பெற்று வந்தனர். அரசு தற்போது அந்த எண்ணிக்கையை வெறும் 4 ஆகக் குறைத்துள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவு குறித்து அதிகாரிகள் கூறுகையில், உண்மையான சராசரி எரிவாயு நுகர்வுக்கு ஏற்ப நிதி உதவியை சீரமைப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் பிரவீன் மால் கனுஜா கூறுகையில், “குடும்பத்தின் சராசரி ஆண்டு எரிவாயு நுகர்வைக் கருத்தில் கொண்டு புதிய விதிகள் முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

