அரூர்: பாப்பிரெட்டிப்பட்டி அரூகே மலைக்கிராமமான கலசப்பாடிக்கு சாலை வசதி செய்து தராததால் மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு பேனர் மற்றும் வீடுகளில் கறுப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மலைப் பகுதியில் அமைந்துள்ளது சித்தேரி ஊராட்சி. இந்த ஊராட்சிக்குட்பட்ட கலசப்பாடி பகுதியில் அரசநத்தம், ஆலமரத்து வலசு, கருக்கம்பட்டி, தரிசுகாடு, கோட்டக்காடு, பொய்க் குண்டல வலசு உள்ளிட்ட 9 கிராமங்கள் அமைந்துள்ளன.
சுமார் 4,500 மக்கள் தொகை கொண்ட இப்பகுதியில் இதுவரை சாலை வசதி இல்லை. இங்குள்ள மக்கள் மருத்துவம், கல்வி, அத்தியாவசிய தேவைகளுக்காக மலைப் பகுதியில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் காட்டு வழியாக கீழிறங்கி வாச்சாத்தி கிராமத்தில் இருந்து செல்ல வேண்டியுள்ளது.
மழைக் காலங்களில் இப்பாதைகளில் இரண்டு இடங்களில் காட்டறுகள் ஓடுவதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இந்நிலையில் மலைக் கிராமங்களுக்கு சாலை வசதி வேண்டும் என இப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக போராடி வருகின்றனர்.கடந்த மாதம் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் சாலை அமைக்க 2 வாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
ஆனால் இது நாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது குறித்து பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தெரிவித்தனர். அப்போது அதிகாரிகள் அளித்த பதிலில் திருப்தியடையாத மக்கள், நேற்று கலசப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் வீடுகளில் கறுப்பு கொடி கட்டியும், ஊரின் நுழைவுப்பகுதியில் மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பதாக கூறி பேனர் அமைத்தும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கலசப்பாடியைச் சேர்ந்த தமிழ் மணி மற்றும் பொதுமக்கள் கூறுகையில், பல்வேறு போராட்டங்களுக்கு பின்னரும் தங்களுக்கு சாலை வசதி செய்து தராததால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவசர காலத்தில் கர்ப்பிணிகளுக்கு பிரசவத்திற்கு மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல முடியாமல் உயிரிழப்புகள் நிகழ்ந்து வருகிறது.
உயிர் போகும் அவசரத்திற்கு கூட ஆம்புலன்ஸ் வந்ததில்லை. விரைவில் சாலை அமைக்கா விட்டால் இங்குள்ள 1,830 வாக்காளர்களும் வரவிருக்கும் தேர்தலை புறக்கணிப்பது என முடிவெடுத்துள்ளோம். அடுத்த கட்டமாக தங்களது ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை அரசிடம் ஒப்படைக்க உள்ளோம், என்றனர்.