“தி.மு.க.க்கு எதிராகவே எங்கள் அரசியல்” – எஸ்.பி. வேலுமணி

Priya
32 Views
2 Min Read

கோவை விமான நிலையத்தில் பேசிய எஸ்.பி. வேலுமணி, அ.தி.மு.க. ஒற்றுமையாக செயல்பட்டு மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான எஸ். பி. வேலுமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, “தொண்டாமுத்தூர் தொகுதி மக்கள் என்னை தொடர்ந்து 5-வது முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்து வெற்றி பெற வைத்துள்ளனர். சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற பிறகு இன்று தான் கோவை வந்துள்ளேன். எனக்காகவும், அ.தி.மு.க. வெற்றிக்காகவும் பாடுபட்ட அனைத்து நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அ.தி.மு.க. எங்களின் உயிர் மூச்சு. கட்சியை பாதுகாப்பது எங்கள் கடமை. எங்களுடைய பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தான். நாங்கள் வைத்த சில கோரிக்கைகளை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார். கட்சியின் வளர்ச்சிக்கும், மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதற்குமான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

கட்சிக்கு ஏற்பட்ட தோல்வி குறித்து முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். இனி வரும் காலங்களில் வெற்றியை நோக்கி செயல்படுவோம். பதவிக்காக நாங்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிக்கவில்லை. மக்களின் ஆதரவு எங்களுக்கு உள்ளது. அதையே சட்டமன்ற தேர்தலில் மக்கள் நிரூபித்துள்ளனர்.

தி.மு.க. அரசுக்கு எதிராக செயல்படுவதே எங்களின் முக்கிய குறிக்கோள். எங்கள் கட்சிக்குள் அண்ணன்-தம்பி போல ஒற்றுமையாக செயல்பட்டு வருகிறோம். தொண்டர்கள் விரும்புவதை தான் செய்வோம். கட்சிக்குள் எந்த குழப்பமும் இல்லை. அனைவரும் ஒன்றுபட்டே உள்ளோம். அண்ணன் சி. வி. சண்முகம் கருத்தும் எங்கள் கருத்தும் ஒன்றுதான். சிலர் தேவையில்லாமல் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். அதற்கு யாரும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்.

கோவையில் 10 வயது சிறுமி பாலியல் கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகவும் வேதனையளிக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறக்கூடாது. தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். மாநிலத்தில் குற்றச்சம்பவங்களை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், கோவை மாவட்ட வளர்ச்சிக்காக கொண்டு வரப்பட்ட திட்டங்கள் எந்த தடையும் இல்லாமல் தொடர்ந்து செயல்படுத்தப்பட வேண்டும் என்றார்.”

Share This Article
Leave a Comment

Leave a Reply