தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு குடும்பப் போர் தற்போது பாட்டாளி மக்கள் கட்சியில் வெடித்துள்ளது. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது சொந்த மகனும் கட்சியின் தலைவருமான அன்புமணி ராமதாஸுக்கு எதிராக மிகக் கடுமையான மற்றும் உணர்ச்சிகரமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். “அன்புமணியின் துரோகக் கும்பலுக்கு ஓட்டுப் போடுவது, உங்கள் பெற்ற தகப்பன் தலையிலேயே நீங்கள் மண்ணள்ளிப் போடுவதற்குச் சமம்” என்று ராமதாஸ் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தந்தை தனது மகனுக்கு எதிராக இவ்வளவு கடுமையான வார்த்தைகளைப் பிரயோகிப்பது தமிழக அரசியலில் இதுவே முதல்முறை எனக் கருதப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தான் அனுபவித்து வரும் மரண வேதனையை வெளிப்படுத்தியுள்ள ராமதாஸ், எப்போது அன்புமணி கொள்கைகளைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டுப் பணத்திற்காக அலையத் தொடங்கினாரோ, அன்றே ஒரு தந்தையாகத் தான் இறந்துவிட்டதாக உருக்கமாகத் தெரிவித்துள்ளார். “உங்களுக்காக நான் சிறை சென்றேன், ரத்தம் சிந்தினேன்; ஆனால் அன்புமணி இன்று அந்த ரத்தத்தைச் ‘சமூக நீதி வியாபாரமாக’ மாற்றிவிட்டார்” என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். ராமதாஸ் தனது அறிக்கையில், ஒவ்வொரு தேர்தல் சீட்டையும் ரூ. 2 கோடிக்கு அன்புமணி விற்றுவிட்டதாகக் பகீர் புகாரையும் முன்வைத்துள்ளார்.
குடும்ப அரசியலைத் தாண்டி, அன்புமணியின் தனிப்பட்ட செயல்பாடுகளையும் ராமதாஸ் விமர்சித்துள்ளார். “பெற்ற அப்பனையே கவனிக்காத ஒருவன், உங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு வேலை வாங்கித் தருவானா? தன் மனைவியையும் மகளையும் அதிகாரத்திற்காகப் பயன்படுத்தும் இவர், சாதாரணப் பாட்டாளிப் பெண்களுக்கு என்ன நன்மையைத் தருவார்?” என்று கேள்வி எழுப்பினார். தர்மபுரியில் போட்டியிடும் சௌமியா அன்புமணி வெற்றி பெற்றால், அந்தத் தர்மபுரி விரைவில் ‘அதர்மபுரி’ என்று பெயர் எடுக்கும் என்றும் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினைப் பாராட்டிப் பேசிய ராமதாஸ், “அரசியலில் ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம், ஆனால் ஸ்டாலின் தன் தந்தை கலைஞர் சாகும் வரை கூடவே இருந்து கவனித்துக் கொண்டார். ஆனால் எனக்கு வாய்த்த பிள்ளையோ, நான் உயிரோடு இருக்கும்போதே என்னைச் செத்துப்போனதாக நினைத்து அரசியல் பண்ணுகிறார்” என்று மனவேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். மாம்பழம் சின்னத்திற்குள் இப்போது துரோகம் எனும் விஷம் ஏறிவிட்டது என்றும், அந்தச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டாம் என்றும் ராமதாஸ் தனது தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தத் தேர்தலில் தான் தோற்றாலும் பரவாயில்லை, ஆனால் துரோகம் ஒருபோதும் ஜெயிக்கக் கூடாது என்பதில் ராமதாஸ் உறுதியாக இருக்கிறார். அன்புமணி போட்டியிடும் 18 தொகுதிகளிலும் அவரது அணியினரைத் தோற்கடிக்க வேண்டும் என்று பாட்டாளி சொந்தங்களுக்கு அவர் கட்டளையிட்டுள்ளார். தேர்தல் பிரசாரம் முடிய சில மணி நேரங்களே உள்ள நிலையில், ராமதாஸ் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை பாமக தொண்டர்களிடையே பெரும் குழப்பத்தையும், அரசியல் களத்தில் மிகப்பெரிய பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

