தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ஒன்றிய அமைச்சர் ஜெ.பி.நட்டா

Priya
9 Views
2 Min Read

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையை (BJP Manifesto) அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா இன்று சென்னையில் வெளியிட்டார். சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற இந்த விழாவில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் மூத்த தலைவர்கள் கலந்துகொண்டனர். “புதிய யுகம் படைக்கும் தாமரை வாக்குறுதி 2026” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை, குறிப்பாகப் பெண்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களைக் கவரும் வகையில் பல அதிரடித் திட்டங்களைக் கொண்டுள்ளது.

மகளிர் நலன் சார்ந்த முக்கிய அம்சங்கள்

பாஜகவின் இந்தத் தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

  • குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படும்.
  • ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒருமுறை வழங்கப்படும் நிதியுதவியாக ரூ.10,000 வழங்கப்படும்.
  • ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் (பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு, தீபாவளி ஆகிய பண்டிகைகளின் போது) இலவசமாக வழங்கப்படும்.
  • தகுதியுள்ள பெண்களுக்கு இ-ஸ்கூட்டர் (e-scooter) வாங்க ரூ.25,000 மானியம் வழங்கப்படும்.

விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கான திட்டங்கள்

விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் நோக்கில், பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் ரூ.6,000 நிதியுடன் கூடுதலாக ரூ.3,000 மாநில அரசின் பங்காகச் சேர்த்து, ஆண்டுக்கு மொத்தம் ரூ.9,000 வழங்கப்படும் என பாஜக வாக்குறுதி அளித்துள்ளது. மேலும், 60 வயதிற்கு மேற்பட்ட மீனவர்களுக்கு மாதம் ரூ.2,000 ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்மீகம் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள்

பாஜகவின் அடையாளமான ஆன்மீக அரசியலைப் பிரதிபலிக்கும் வகையில், தைப்பூசம் திருவிழாவைப் பொது விடுமுறை நாளாகவும், மாநிலப் பண்டிகையாகவும் அறிவிப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றும் நடைமுறைக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பு வசதிகளைப் பொறுத்தவரை, சென்னை-பெங்களூரு மற்றும் சென்னை-ஹைதராபாத் இடையே அதிவேக ரயில் (High Speed Rail) திட்டங்கள் செயல்படுத்தப்படும் எனத் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசிய ஜே.பி.நட்டா, தமிழகத்தில் திமுகவின் “குடும்ப அரசியல் மற்றும் ஊழல்” ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர மக்கள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மகளிருக்கு மாதம் ரூ.2,000 மற்றும் 3 இலவச சிலிண்டர் போன்ற பாஜகவின் வாக்குறுதிகள், அதிமுகவின் தேர்தல் அறிக்கையோடு ஒத்துப்போவது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply