தமிழகச் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 17 தொகுதிகளுக்கான மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று (மார்ச் 30, 2026) அதிகாலை வெளியிட்டுள்ளார். இதனுடன் அதிமுக நேரடியாகப் போட்டியிடும் 167 தொகுதிகளுக்கான முழுமையான AIADMK Final List தயாராகியுள்ளது.
சென்னையில் நட்சத்திரப் போர்
இந்த இறுதிப் பட்டியலில் சென்னை மாவட்டத்தின் முக்கியத் தொகுதிகளுக்குப் பலமான வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்:
- கொளத்தூர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து அதிமுக சார்பில் சந்தானகிருஷ்ணன் களம் காண்கிறார்.
- ஆயிரம் விளக்கு: திமுக எம்.எல்.ஏ எழிலனை எதிர்த்து முன்னாள் அமைச்சர் வளர்மதி போட்டியிடுகிறார்.
- அண்ணாநகர்: முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா மீண்டும் அண்ணாநகர் தொகுதியில் களம் இறக்கப்பட்டுள்ளார்.
- சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி: உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து ஆதிராஜாராம் போட்டியிடுகிறார்.
- ஆர்.கே.நகர்: வட சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் எம்.எல்.ஏ-க்களுக்கு மீண்டும் வாய்ப்பு
இந்த 17 பேர் கொண்ட பட்டியலில் 2 முன்னாள் அமைச்சர்கள், 6 முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் மற்றும் ஒரு முன்னாள் எம்.பி-க்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தி.நகர் தொகுதியில் தி.நகர் சத்தியா, விருகம்பாக்கத்தில் விருகை வி.என்.ரவி, சோழிங்கநல்லூரில் கே.பி.கந்தன், வேளச்சேரியில் எம்.கே.அசோக் ஆகியோர் மீண்டும் களம் காண்கின்றனர்.
கூட்டணி நிலவரம்
மொத்தமுள்ள 234 தொகுதிகளில் அதிமுக 167 தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிடுகிறது. எஞ்சிய 67 தொகுதிகள் பாஜக, பாமக, அமமுக, தமாகா உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே முதற்கட்டப் பட்டியலில் எடப்பாடி பழனிசாமி (எடப்பாடி), கே.பி.முனுசாமி (வேப்பனஹள்ளி), நத்தம் விசுவநாதன் (நத்தம்) மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் (திண்டுக்கல்) ஆகியோர் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

