பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அருண் ரங்கராஜுலு தயாரிப்பில், ராம் சக்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம், ‘கார்மேனி செல்வம்’. இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன், லட்சுமி பிரியா சந்திரமௌலி, அபிநயா, கார்த்திக் குமார், படவா கோபி, மதுமிதா, அர்ஜுனன் , ஹரிதா பராகோட், கோதண்டம், கரண் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஏப்ரல் 3-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில், எழுத்தாளர் செந்தமிழன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அதில் பேசிய நடிகர் சமுத்திரக்கனி, “இந்தத் திரைப்படத்தில் பணியாற்றியது இறைவனின் அருள் என்றுதான் சொல்ல வேண்டும். என்னுடைய நண்பர் ஸ்ரீராம் மூலமாக இப்படத்தின் திரைக்கதை எனக்கு வந்தது. கதையைப் படிக்கும் போதே அந்த இயக்குநரின் மனநிலை என்ன என்று தெரிந்துவிடும். அந்த மனசு தான் இயக்குநர் ராம் சக்ரியை என்னிடம் அழைத்து வந்தது.
அவரை சந்தித்து இதைத்தானே சொல்ல வருகிறீர்கள், வாருங்கள் சேர்ந்து சொல்வோம் என்று இப்படத்தின் பணியை தொடங்கினோம். அவர் இப்போது என் வாழ்க்கையில் மிக முக்கியமான நண்பராக இருக்கிறார். இவரைப் போன்ற மனிதர்களை பார்ப்பது மிகவும் அரிது. இவரை எல்லாம் மிகவும் பத்திரமாக பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் நிறைய உண்மைகளுடனும் நிறைய எளிமைகளுடனும் நம்மால் இந்த சமூகத்திற்கு ஏதேனும் ஒரு பங்களிப்பு இருந்திட வேண்டும், எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மிகவும் குறைவு. இப்படி இருப்பவர்களால் தான் உலகம் இயங்குகிறது என்று நான் நினைக்கிறேன்.
கேபி. சார் பட்டறையில் எல்லோரும் வருவார்கள், எழுதுவார்கள். ஆனால், செந்தமிழனின் எழுத்திற்கு நான் மிகப்பெரிய ரசிகன். ‘மைக்ரோ தொடர்கள் மேக்ரோ சிந்தனைகள்’ என்று ஒரு தொடர் சென்று கொண்டிருந்தது. கைலாசம் சார் செந்தமிழனை தொடர்ந்து எழுதச் சொல் என சொல்வார், அவ்வளவு தரமான ஒரு எழுத்தாளர் செந்தமிழன்.
மற்றவர்களின் உதவியை எதிர்பாராமல் தற்சார்பு வாழ்க்கையை யார் வாழ்கிறார்களோ, அவர்கள்தான் மிகப்பெரிய செல்வந்தர்கள். அவர்கள்தான் மிகவும் சந்தோஷமானவர்கள். இதைத்தான் ‘கார்மேனி செல்வம்’ சொல்கிறது.
இறைவனை நோக்கி காரைக்கால் அம்மையார் எழுதிய பாடல்களை, அதே ஸ்ருதியில் இன்றும் பாடிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி ஒரு நிகழ்ச்சிக்கு நாங்களும் சென்றோம். அதைப் பார்த்த இயக்குநர் ‘தேவலோகத்தில் இருக்கிறோமோ..!’ என்று தன் உணர்வை பகிர்ந்து கொண்டார். நாங்கள் இருவரும் வேறு ஒரு உலகத்தில் மிதந்தோம்.
பணக்காரன் வேறு. செல்வந்தர் வேறு. பணக்காரன், பிரச்சனைகளோடு இருப்பவன். செல்வந்தர், மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பவர். உங்கள் அனைவரையும் செல்வந்தர் ஆக்குவது தான் இந்தப் படம். இந்த படைப்பில் இது போன்ற நிறைய விஷயங்களை பேசி இருக்கிறோம்.
‘கார் மேனி செல்வம்’ சாதாரண திரைப்படம் மட்டுமல்ல. நாங்கள் இல்லாமல் போகலாம், ஆனால், இந்த படைப்பு இருக்கும். உங்களுடன் எப்போதும் இருக்கும்.
நிறைய சுமைகளை தூக்காதீர்கள். இ.எம்.ஐ. என்ற பெயரில் சுமைகளை சுமக்காதீர்கள். அதன் பிறகு நடக்கக்கூட முடியாது. அந்த சுமையை சிறிது சிறிதாக இறக்கி வைத்து விட்டு, கை வீசி சந்தோஷமாக நடந்து பாருங்கள். மகிழ்ச்சியை உணர்வீர்கள்” என்றார்.

