உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், உத்திரப் பிரதேச மாநில அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் ஏப்ரல் 1, 2026 முதல் மாநிலத்தில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு முட்டையிலும் அதன் உற்பத்தி தேதி (Laying Date) மற்றும் காலாவதி தேதி (Expiry Date) அச்சிடப்பட்டிருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பழைய அல்லது அழுகிய முட்டைகளைத் “புதிய முட்டைகள்” என்று கூறி விற்பனை செய்வதைத் தடுக்கவே இந்த Uttar Pradesh Egg Order பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாநிலக் கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முகேஷ் மேஷ்ராம் இது குறித்துக் கூறுகையில், “முட்டைகள் நேரடியாக மனித ஆரோக்கியத்துடன் தொடர்புடையவை. எனவே, ஏப்ரல் 1 முதல் முத்திரை இல்லாத முட்டைகள் கண்டறியப்பட்டால், அவை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்படும் அல்லது மனித பயன்பாட்டிற்குத் தகுதியற்றது என அறிவிக்கப்படும்” என்று எச்சரித்துள்ளார்.
முக்கிய விவரங்கள்:
- செலவு: ஒரு முட்டையில் அச்சிடுவதற்கு வெறும் 3 முதல் 4 பைசா மட்டுமே செலவாகும் என்பதால், முட்டை விலை அதிகரிக்காது.
- சேமிப்பு விதிமுறை: முட்டைகளை 30°C வெப்பநிலையில் வைத்தால் 2 வாரங்கள் வரையிலும், 2 முதல் 8°C குளிர்சாதன வெப்பநிலையில் வைத்தால் 5 வாரங்கள் வரையிலும் பயன்படுத்தலாம்.
- இதர மாநில முட்டைகள்: அண்டை மாநிலங்களில் இருந்து வரும் முட்டைகளுக்கும் இந்த விதிமுறை பொருந்தும். விதிகளை மீறினால் அந்த முட்டைகளும் அழிக்கப்படும்.
தற்போது உத்திரப் பிரதேசத்தில் ஆக்ரா மற்றும் ஜான்சி ஆகிய இடங்களில் மட்டுமே முட்டைகளுக்கான பிரத்யேக குளிர்சாதனக் கிடங்குகள் உள்ளன. காய்கறிகளுடன் முட்டைகளைச் சேமிக்கக் கூடாது என்பதால், இந்த புதிய விதிமுறை முட்டை விற்பனையாளர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், நுகர்வோர் நலனே முக்கியம் என்பதில் அரசு உறுதியாக உள்ளது.

