உண்மை சம்பவங்களின் தாக்கத்துடன், கிராமிய பின்னணியில் ஆணவக் கொலை என்ற கொடூரமான சமூக பிரச்சினையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள படம் தான் ‘கொலைச் சேவல்’. திருவண்ணாமலை அருகிலுள்ள ஒரு கிராமத்தை களமாகக் கொண்டு, காதல் திருமணம் செய்த இளம் தம்பதியரைச் சுற்றி கதை நகர்கிறது.
கலையரசன் மற்றும் தீபா பாலு காதல் திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் வாழ்கிறார்கள். நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் தீபா, குடும்ப வழக்கப்படி காட்டில் இருக்கும் குலதெய்வ கோயிலுக்கு செல்ல வேண்டிய சூழல் உருவாகிறது. அங்கே பூஜை முடிந்து திரும்பும் தருணத்தில் எதிர்பாராத சம்பவங்கள் நிகழ்கின்றன. இந்த காதல் திருமணத்தை ஏற்க மறுக்கும் தீபாவின் குடும்பத்தினர் ஆயுதங்களுடன் கோயிலுக்கு வருவது கதையை பதற்றமான திருப்பத்துக்கு கொண்டு செல்கிறது. அங்கே என்ன நடக்கிறது என்பதே படத்தின் மையக் கரு.
படம் மிக எளிமையான கிராமிய சூழலில் தொடங்கி மெதுவாக நகர்கிறது. ஆரம்பத்தில் குடும்பத்தினரின் பேச்சுகள், பழக்கவழக்கங்கள், கிராமத்து வாழ்க்கை போன்ற காட்சிகள் நீளமாக விரிகின்றன. இதனால் கதையின் மையம் தாமதமாக வெளிப்படுவது ஒரு குறையாக இருந்தாலும், இறுதிக் கட்டத்தில் நிகழும் சம்பவங்கள் படத்திற்கு தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
நாயகனாக வரும் கலையரசன் இயல்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார். குறிப்பாக கிளைமாக்ஸில் கர்ப்பிணியான மனைவியை காப்பாற்ற வேண்டுமென்ற துடிப்புடன் அவர் வெளிப்படுத்தும் உணர்ச்சிகள் மனதை உலுக்குகின்றன. புதுமுகமான தீபா பாலு, கர்ப்பிணி பெண்ணாகவும் காதலியாகவும் தன்னம்பிக்கை கொண்ட நடிப்பை வழங்கியுள்ளார். அவரது இயல்பான முகபாவனைகளும் உரையாடல் வெளிப்பாடும் கவனிக்க வைக்கின்றன.
நண்பனாக வரும் பாலசரவணன் சில இடங்களில் சிரிப்பை தர முயன்றாலும், அது முழுமையாக வேலை செய்யவில்லை. அதேசமயம் கிளைமாக்ஸில் அவரது நடிப்பில் உணர்ச்சி தெரிகிறது. கஜராஜ் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்கள் கதைக்கு தேவையான வலிமையை முழுமையாக வழங்காதது சிறு குறையாகத் தெரிகிறது.
பி.ஜி. முத்தையாவின் ஒளிப்பதிவு படத்தின் மிகப்பெரிய பலமாகும். கிராமத்தின் இயற்கை அழகையும் காட்டுப்பகுதியின் சூழலையும் பல்வேறு கோணங்களில் அழகாக பதிவு செய்துள்ளார். சாந்தனின் பின்னணி இசை காட்சிகளுக்கு பதட்டமான மனநிலையை உருவாக்குகிறது.
ஆணவக் கொலை போன்ற கடுமையான சமூக பிரச்சினையை எதார்த்தமாக காட்ட முயன்றிருக்கும் இயக்குனர் துதிவாணனின் முயற்சி பாராட்டுக்குரியது. இருப்பினும் கிளைமாக்ஸ் பகுதியில் வன்முறை காட்சிகள் அதிகமாக இருப்பது சிலருக்கு கடினமாக உணரப்படலாம். மொத்தத்தில், சமூகத்தின் கொடூரமான முகத்தை நேர்மையாக வெளிப்படுத்த முயலும் படமாக ‘கொலைச் சேவல்’ கவனம் ஈர்க்கிறது.
கொலைச்சேவல் – சினிமா விமர்சனம்

Leave a Comment
