மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணத் தொகையாக ரூ.6,000 வழங்கப்படும் என அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை வழங்க ஏதுவாக டோக்கன்கள் வீடுவீடாக சென்று விநியோகிக்கப்பட்டு வருகிறது. டோக்கன்கள் கிடைக்கப்பெற்றவர்கள், அதில் குறிப்பிட்ட தேதியிலும், நேரத்திலும், குறிப்பிட்டுள்ள நியாய விலைக் கடைக்கு சென்று ரூ.6,000 பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் ரூ. 6,000 நிவாரணத் தொகைக்கான டோக்கன்கள் கிடைக்கப்பெறாத மற்றும் குடும்ப அட்டை இல்லாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் நியாய விலைக் கடைகளில், அதற்கென உரிய படிவத்தினை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ரேஷன் கார்டு இல்லாத 5.5 லட்சம் பேர் ரூ.6,000 நிவாரணம் பெற விண்ணப்பித்துள்ளனர்.
17ம் தேதி முதல் ரேஷன் கடைகள் மூலம் 5.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் ரூ.4.90 லட்சம் பேரும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 29 ஆயிரம் பேரும் விண்ணப்பித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் 22,000 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 14,000 பேரும் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்துள்ள 5.5 லட்சம் பேரின் ஆவணங்கள் பரிசீலனையில் இருப்பதாக தமிழக அரசு தகவல் தெரிவித்திருக்கிறது.