தமிழ்நாட்டில் தைப்பூசம், குடியரசு தினம் உள்ளிட்ட தொடர் விடுமுறையொட்டி 580 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்துத்துறை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
தைப்பூசம், குடியரசு தினம் உள்ளிட்ட தொடர் விடுமுறை தினங்களையொட்டி சென்னையிலிருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு 24ம் தேதி மற்றும் 25ம் தேதி தினசரி இயக்க கூடிய பேருந்துகளு டன் கூடுதலாக 405 சிறப்பு பேருந்துகளும் மற்றும் கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூருவிலிருந்து பிற இடங்களுக்கும் 175 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 580 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. தொடர் விடுமுறையையொட்டி 24-ம் தேதி பயணம் மேற்கொள்ள 5,722 பேரும் 25-ம் தேதி 7222 பேரும் சென்னையிலிருந்து பயணம் மேற்கொள்வதற்காக முன்பதிவு செய்துள்ளனர்.
அதேபோல், திரும்பி வருவதற்கு ஞாயிறன்று 15,669 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். மேலும், 25ம் தேதி பவுர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலைக்கு சென்னையிலிருந்து 10 குளிர்சாதன பேருந்துகள் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக காலை 10 மணி முதல் இயக்கப்பட உள்ளது. இந்த பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இச்சிறப்பு பேருந்து இயக்கத்தை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது..