தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஊரகப் பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, மக்களுக்கு தேவையான சேவைகளை வழங்கி அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துவதே ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் முக்கிய நோக்கமாகும்.

அதன்படி, ஊரகப் பகுதிகளில் அடிப்படை வசதிகளான சாலைகள், தெருவிளக்குகள், குடிநீர் வழங்கல், சுகாதாரம் போன்றவற்றை மேம்படுத்தி, உட்கட்டமைப்புகளான பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், ஊரகச் சந்தைகள், உணவு கிடங்குகள் போன்றவற்றை ஏற்படுத்தி, புதிய ஊரக வளர்ச்சித் திட்டங்களை உருவாக்கி அதனை திறம்பட தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. அதன்படி, தற்போது வரை 312 புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடிங்கள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு, அதில் 265 கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் கோயம்புத்தூர் மாவட்டம் – பெரியநாயக்கன்பாளையம், கடலூர் மாவட்டம் – மங்களுர் மற்றும் பண்ருட்டி, ஈரோடு மாவட்டம் – அம்மாபேட்டை, கன்னியாகுமரி மாவட்டம் – தோவாளை, புதுக்கோட்டை மாவட்டம் – குன்றாண்டார்கோவில், தென்காசி மாவட்டம் – ஆலங்குளம், தஞ்சாவூர் மாவட்டம் – மதுக்கூர் மற்றும் சேதுபாவாசத்திரம், தேனி மாவட்டம் – சின்னமனூர், தூத்துக்குடி மாவட்டம் – கருங்குளம், திருச்சி மாவட்டம் – புள்ளம்பாடி, திருப்பூர் மாவட்டம் – பொங்கலூர், விழுப்புரம் மாவட்டம் – கானை, மேல்மலையனூர், முகையூர் மற்றும் வானூர் ஆகிய இடங்களில் 64 கோடியே 53 லட்சம் கட்டப்பட்டுள்ள 17 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, வனத்துறை அமைச்சர் க. பொன்முடி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி. கணேசன், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்குநர் பா.பொன்னையா ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here