1750 ஆம்.. பிரிட்டிஷார் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்த தொடங்கி 1850 ஆம் ஆண்டுகளில் முழுமையான ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினார்கள்… அதுவரை இங்கிலாந்து நாடாளுமன்றம் மற்றும் அங்கு இயற்றப்படும் சட்டங்களின் அடிப்படையில் தான் அவர்களது ஆட்சி நிரவாகம் நடைபெற்றது.
எனினும் கடந்த 1920 ஆம் ஆண்டுதான் பிரிட்டிஷ் இந்தியாவில் முதல் முறையாக பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது.
இம்பீரியல் லெஜிஸ்லேடிவ் கவுன்சில் என்று அழைக்கப்பட்ட மக்கள் மன்றத்திற்கும், மாகாணங்கள் கவுன்சிலுக்கும் இந்த தேர்தல் நடத்தப்பட்டது.
நவீன இந்தியாவின் முதல் தேர்தலாக இது அமைந்தது.
டெல்லியை தலைமை இடமாகக் கொண்ட புதிய மத்திய லெஜிஸ்ட்ரேடிவ் அசெம்பிளி என்பது இம்பீரியல் கவுன்சிலின் கீழ் சபையாக இருந்தது. அதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 104 உறுப்பினர்கள் இருந்தார்கள்.
அவற்றில் 66 பேர் நேரடி போட்டி மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.
38 இடங்கள் வர்த்தக சபை மூலமும் தேர்வு செய்யப்படும் ஐரோப்பியர்களுக்காக ஒதுக்கப்பட்டது.
இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி 48 இடங்களிலும், பிற கட்சிகளும், சுயேச்சைகளும் 47 இடங்களிலும் வெற்றி பெற்றார்கள்.
கவுன்சில் ஆஃப் ஸ்டேட் எனப்படும் மேல் சபைக்கான 34 இடங்களில் 24 இடங்கள் தேர்தல் மூலம் நிரப்பப்பட்டன.
5 இடங்கள் இஸ்லாமியர்களுக்கென ஒதுக்குப்பட்டன.
3 இடங்கள் வெள்ளையர்களுக்கும், சீக்கியர் மற்றும் ஐக்கிய மாகாணத்திற்கும் தலா ஒரு இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இவ்வாறு தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றம் கடந்த 1921 ஆம் ஆண்டு பிப்ரவரி ஒன்பதாம் தேதி தொடங்கப்பட்டது.
இதேபோல் மாகாண சட்டமன்றங்களுக்கான தேர்தலும் அப்போது நடத்தப்பட்டது. மொத்தம் உள்ள 637 இடங்களில் 440 இடங்கள் தேர்தல் மூலம் நிரப்பப்பட்டன.
188 இடங்களுக்கான பிரதிநிதிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்கள். அப்போது இந்த தேர்தலை அனைவரும் புறக்கணிக்குமாறு மகாத்மா காந்தி அழைப்பு விடுத்திருந்த போதிலும் ஆறு இடங்களுக்கு மட்டுமே வேட்பாளர்கள் போட்டியிடவில்லை. இதில் 38 இடங்கள் வெள்ளையர்களுக்கு ஒதுக்கப்பட்டன.
இந்தியாவில் இம்பீரியல் லெஜிஸ்லேடிவ் கவுன்சிலுக்கு தேர்தல் நடத்தப்பட்ட அதே நேரம், மாகாண சட்டமன்றங்களுக்கும் முதல் முறையாக தேர்தல் நடத்தப்பட்டது.
சென்னை மாகாணத்தில் நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சி வெற்றி பெற்றது.
அக்கட்சியின் தலைவராக சர். பிட்டி தியாகராய செட்டியார் இருந்தபோதிலும், ஏ.சுப்பராயலு ரெட்டியார் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
அன்றைய சென்னை மாகாணத்தில், தமிழக எல்லையையொட்டிய ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களின் எல்லையோர பகுதிகளும் இடம்பெற்றிருந்தன.
சென்னை மாகாண சட்டமன்றத்திற்கான 98 இடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்தலில், 63 இடங்களை நீதிக் கட்சி வென்றது. சுயேச்சைகள் கூட 18 இடங்களில் வெற்றி பெற்ற அதே நேரம் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. .
நான்கு கோடி மக்கள் தொகை கொண்ட சென்னை மாகாணத்தில் அப்போது 12 லட்சத்துக்கும் அதிகமானோர் வாக்குரிமை பெற்று இருந்தனர்.
அவர்களில் சுமார் மூன்று லட்சத்து 5 ஆயிரம் பேர் மட்டுமே இந்த தேர்தலில் வாக்களித்தனர்.
சென்னை மாகாணத்தில் ஓரளவு படித்தவர்கள் அதிகம் இருந்த போதிலும், தேர்தல் குறித்த விழிப்புணர்வு இல்லாததால் மாகாணம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 23 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின.
அதே நேரம் சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 52% பதிவாகின.
மத்தியிலும், மாகாணங்களிலும் இரட்டை ஆட்சி முறையின் கீழ் நடைபெற்ற முதல் தேர்தல் இதுவாகும்.
இந்த தேர்தல் முறை அப்போதுதான் அறிமுகம் ஆகி இருந்தது.
இதுபோல் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் பிரிட்டிஷ் இந்தியாவில் சில தேர்தல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன.
எனினும் நமது நாடு சுதந்திரம் பெற்ற பிறகு கடந்த 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் தேர்தலே நமக்கான மக்களாட்சியின் மாண்புகளை பிரதிபலித்தது. அது இன்று வரை தொடர்ந்து கொண்டு இருக்கிறது.