திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு முன் அமைந்துள்ள கடற்கரையில் கடல் சீற்றத்தின் காரணமாக அரிப்பு ஏற்பட்டுள்ளது. வழக்கத்தை விட கடல் நீரும் சுமார் 50 அடி தூரத்திற்கு வெளியே வந்துள்ளது. அதேபோல் அப்பகுதியில் பாறைகளும் வெளியே தெரிகின்றன. இதனால் கோவில் முன்புள்ள கடற்கரை படிக்கட்டு பகுதியில் இருந்து கடலுக்குள் பக்தர்கள் இறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடல் அரிப்பு ஏற்பட்டுள்ள பகுதியில் பாதுகாப்பு கருதி பக்தர்கள் இறங்காதவாறு தடுப்பு வேலிகள் கொண்டு பாதை அடைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் கடற்கரையில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். இந்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் தேசிய கடலோர ஆராய்ச்சி மைய தலைமை விஞ்ஞானி ராமநாதன் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவினர் கடல் அரிப்பு ஏற்பட்ட பகுதியில் ஆய்வு செய்தனர். அதேபோல, திருச்செந்தூரில் கடல் அரிப்பு ஏற்பட்ட பகுதியில் தேசிய ஆராய்ச்சி மைய குழுவினரும் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், திருச்செந்தூர் கடல் அரிப்பை தடுக்க விரைவில் பணிகள் தொடங்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு உறுதியளித்துள்ளார். சென்னையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திருச்செந்தூர் கடற்கரையில் ஏற்பட்டுள்ள அரிப்பை தடுப்பது குறித்து சென்னை ஐஐடி, நபார்டு, மீன்வளத்துறை உள்ளிட்ட அமைப்புகள் ஆய்வு செய்தன. கடல் அரிப்பை தடுக்க 5 அமைப்புகள் அறிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில், 3 அறிக்கைகள் ஒத்துப்போகின்றன. 2 அமைப்புகளின் அறிக்கைகள் மாறுபடுகின்றன. இது குறித்து முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு, கடல் அரிப்பை தடுக்க விரைவில் பணிகள் தொடங்கப்படும்.” என்றார்.