தமிழக அரசு சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.2,874 கோடியில் வங்கிக்கடன் இணைப்புகள் வழங்குதல், 12,233 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் உட்பட 22 ஆயிரம் பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மதுரை ஒத்தக்கடையில் (9.09.2024)ல் நடைபெற்றது.
இவ்விழாவில் அமைச்சர் உதயநிதி பேசியதாவது:
அரசு விழாவில் பல்வேறு துறைகள் சார்பில் ரூ.298 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஓர் அரசு எப்படி செயல்படுகிறது என்பதை தேர்தல் என்ற தேர்வு, போட்டி மூலம் மக்களாகிய நீங்கள் ஆசிரியர்களாக இருந்து மதிப்பெண்கள் போடுவீர்கள். அந்த வகையில் திராவிட மாடல் ஆட்சிக்கு மக்களவைத் தேர்தலில் நற்சான்றிதழாக 40-க்கு 40 தொகுதியில் வெற்றி பெறச் செய்து 100 சதவீத தேர்ச்சியை அளித்துள்ளீர்கள் எனவும்,
அந்த வெற்றி, இன்னும்கூடுதலாக உங்களுக்காக உழைக்க வேண்டும், நிறைய திட்டங்களைக் கொண்டு வரவேண்டும் என்ற பொறுப்பை அதிகப்படுத்தி உள்ளது. அரசின் சேவைகளை தேடிச் சென்ற காலம்போய், அரசே தேடி வந்து திட்டங்களையும் , நலத்திட்ட உதவிகளை திராவிட மாடல் ஆட்சி வழங்கிக்கொண்டிருக்கிறது.
கடந்த ஆண்டு ரூ.30 ஆயிரத்து75 கோடி வங்கிக்கடன் வழங்கப்பட்டது. தற்போது ரூ.35 ஆயிரம் கோடி வழங்க இலக்கு நிர்ணயித்து, இதுவரை ரூ.14 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 31 ஆயிரம் குழுக்களுக்கு ரூ.2,900 கோடியை வழங்கியிருக்கிறோம்.
பல ஆண்டுகளாக வசிக்கும் வீடுகளுக்கு பட்டாக்கள் இல்லை என்பதை அறிந்து, மதுரையில் 12 ஆயிரம் பேருக்கு பட்டாக்கள் வழங்கியிருக்கிறோம். பட்டா பெற்ற மக்கள் அனைவரும் இனி நிம்மதியாக தூங்கலாம். இன்றிலிருந்து உங்களது வீடு சட்டப்பூர்வமானது. மேலும், பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டும் என முதல்வர் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். இதன்மூலம் தமிழகப் பெண்கள் தலைநிமிர்ந்து நிற்கின்றனர்.
எங்களுக்கு எப்படி தமிழக முதல்வர் தூதுவராக உள்ளாரோ, அதேபோல், திராவிட மாடல் அரசின் தூதுவராக மக்களாகிய நீ்ங்கள் (பெண்கள்) இருக்க வேண்டும். அரசின் திட்டங்களை, சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லவேண்டும். இங்கு வழங்குவது வெறும் கடன் தொகை கிடையாது. வங்கிக் கடன் இணைப்புப் பெற்றுள்ள பெண்கள், 4 பேருக்கு வேலைவாய்ப்பை கொடுக்கும் தொழில்முனைவோராக வேண்டும். திராவிட மாடல் அரசும், முதல்வரும் உங்களுக்கு எப்போதும் ஆதரவாக இருப்போம் என பேசியுள்ளார்..