தமிழகத்தில் 9019 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலை மின் நிலையங்களை நுாற்பாலைகள் உள்ளிட்ட பல்வேறு தனியார் நிறுவனங்கள் செயல்படுத்தி வருகின்றன.
பொதுவாக மே முதல் செப்டம்பர் மாதம் வரை காற்றாலை சீசன் என்று கூறப்படுகிறது. சீசன் துவங்கியதும் காற்றாலைகளில் இருந்து தினமும் சராசரியாக 8-9 கோடி யூனிட் மின்சாரம் கிடைக்கும். இது ஜூன், ஜூலை மாதங்களில் 10 கோடி யூனிட்களை தாண்டும். அதன்படி 2022 ஜூலையில் 12.02 கோடி யூனிட்கள் இதுவரை கிடைத்த உச்ச அளவு காற்றாலை மின்சாரமாகும்.
அதேபோல் காற்றாலை சீசன் இம்மாதம் துவங்கிய நிலையில் நேற்று முன்தினம் 10.27 கோடி யூனிட் மின்சாரம் கிடைத்த நிலையில் மே மாதத்தில் காற்றாலைகளில் 10 கோடி யூனிட் கிடைப்பது இதுவே முதல்முறையாகும். மேலும் காற்றாலை மின்சாரம் சுற்றுச்சூழலை பாதிக்காமல் மிக குறைந்த விலையில் கிடைப்பதால் மின் வாரியத்தின் மின் தேவையானது அதிகம் பூர்த்தியடைவதாக கூறப்படுகிறது.