முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை மாவட்டம் பொள்ளாச்சி அரசு விழாவில் பங்கேற்க வந்துள்ளார். இங்கு நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று 20 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி புதிய திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். இந்நிலையில், பொதுமக்களை அழைத்து வருவதற்காக ஆளுங்கட்சியினர் பள்ளி வாகனங்களை வற்புறுத்திப் பெற்றுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என அண்ணாமலை கூறியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது;

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இன்று பொள்ளாச்சி செல்லவிருப்பதால், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தனியார் பள்ளிகளில் இருந்தும், பள்ளி வாகனங்களை, முதலமைச்சர் வருகைக்காகப் பயன்படுத்த வற்புறுத்திப் பெற்றுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

download 28

திமுக அரசின் இந்த அதிகார துஷ்பிரயோகத்தால், மாணவர்கள் பள்ளிக்கு வர போதுமான வாகனங்கள் இல்லாமல், பல பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. பள்ளியிறுதிப் பொதுத்தேர்வுகள் நடைபெறும் இந்த நேரத்தில், தங்கள் விளம்பர அரசியலுக்காக, மாணவர்கள் பயணம் செய்யும் பள்ளி வாகனங்களைப் பிடுங்கிக் கொள்ளும் உரிமையை, திமுக அரசுக்கு யார் கொடுத்தது?

மாவட்ட ஆட்சியர் மற்றும் பள்ளிக் கல்வித் துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகள், திமுகவின் இது போன்ற அதிகார துஷ்பிரயோகத்துக்குத் துணை செல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். ஒருபுறம், போதைப்பொருள்கள் விற்பனையைக் கட்டுப்படுத்தத் தவறி, தமிழக இளைஞர்கள் வாழ்க்கையைப் பாழாக்கிக் கொண்டிருக்கும் வேளையில், பள்ளி மாணவர்களுக்கான, பொதுத் தேர்வுகள் நடைபெறும் நேரத்தில், தங்கள் அரசியலுக்காக பள்ளி வாகனங்களை முறைகேடாக கட்டாயப்படுத்தி வாங்குவது, அராஜகத்தின் உச்சம் என்பதை விளம்பர விரும்பி முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என அண்ணாமலை கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here