நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மலைப்பகுதிகளில் மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழைப்பொழிவு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஆகஸ்ட் 4-ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர் மலைப்பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. இதேபோல், தேனி, தென்காசி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை ரெட் அலர்ட் – கனமழைக்கான வாய்ப்பு
நாளை (ஆகஸ்ட் 5) நீலகிரி மாவட்டத்திலும், கோயம்புத்தூர் மலைப்பகுதிகளிலும் கனமழை முதல் அதி கனமழை பெய்யக்கூடும். இதற்காக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், தேனி, தென்காசி மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கும், திண்டுக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.
ஆகஸ்ட் 6-ம் தேதி நீலகிரி மாவட்டத்தில் கனமழை முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர் மலைப்பகுதிகள், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு
ஆகஸ்ட் 7-ம் தேதி நீலகிரி மாவட்டத்தில் கனமழை முதல் மிக கனமழைக்கும், கோயம்புத்தூர் மலைப்பகுதிகள், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது. ஆகஸ்ட் 8-ம் தேதி நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மலைப்பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அடுத்த சில நாட்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், திருவண்ணாமலையில் அதிகபட்சமாக 9 செ.மீ மழையும், சென்னை, தாம்பரம் ஆகிய பகுதிகளில் 7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
மீனவர்கள் கடலுக்குச் செல்வதற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 4 முதல் ஆகஸ்ட் 8 வரை தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். இதேபோல், வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளிலும் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.