சென்னை தி.நகர், பாண்டே பஜார், அண்ணாநகர் மற்றும் வானரபட் போன்ற முக்கிய மார்க்கெட் பகுதிகள் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் சாலையோர வாகன நிறுத்துமிடங்கள் அமைந்துள்ளன. கூடுதலாக, மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை சாலைகளில் பார்க்கிங் வசதிகள் உள்ளன. இந்த வாகன நிறுத்துமிடங்களில், இரு சக்கர வாகனங்களுக்கு, ஒரு மணி நேரத்திற்கு, 5 ரூபாயும், நான்கு சக்கர வாகனங்களுக்கு, 20 ரூபாயும், மாநகராட்சி கட்டணம் நிர்ணயித்துள்ளது.
பாண்டி பஜார் பகுதியில் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் உள்ளது. இருப்பினும், பலர் அங்கு வாகனங்களை நிறுத்தாமல், சாலையோர வாகன நிறுத்தங்களையே அதிகம் பயன்படுத்துகின்றனர்.
எனவே, அப்பகுதியில் சிறப்பு கட்டணமாக இருசக்கர வாகனங்களுக்கு 15 ரூபாய், நான்கு சக்கர வாகனங்களுக்கு 60 ரூபாய் என ஒரு மணி நேரத்திற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது.
ஆனால், தனியார் நிறுவனங்கள் நிர்ணயித்த பார்க்கிங் கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்தன. இரு சக்கர வாகனங்களுக்கான கட்டணம் ரூ.15 என்ற விவரத்தை மறைத்துவிட்டு, அனைத்து இருசக்கர வாகனங்களுக்கும் ரூ.20 வசூலித்தது. இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ரசீதும் தரப்படுவதில்லை.
அதேபோல், கடலோரப் பகுதிகள் மற்றும் வணிகச் சந்தைகளில் நிறுத்தப்படும் நான்கு சக்கர வாகனங்களுக்கு, 20 ரூபாய்க்கு பதிலாக, 60 ரூபாய் வரை வசூலிக்கப்பட்டு வந்தது.இதனால், தனியார் நிறுவனத்திற்கு வழங்கிய ஒப்பந்தத்தை, சென்னை மாநகராட்சி ரத்து செய்தது.
ஆனால், அந்நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, மாநகராட்சியின் ஒப்பந்த ரத்துக்கு தடை பெற்று மீண்டும் அடாவடி வசூலில் ஈடுபட்டு வந்தது. தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்த நிலையில், ‘தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது செல்லும் என, சமீபத்தில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
சாலையோர வாகன நிறுத்தத்திற்கு மறு டெண்டர் விடும் வரை மெரினா, பெசன்ட் நகர், பாண்டி பஜார் உள்ளிட்ட சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட எல்லைகளில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு, கட்டணம் செலுத்த வேண்டாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.