சென்னை நந்தனம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறும் கட்டுமான பணிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.  இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது,

“1969 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நந்தனம் கலை கல்லூரியானது 123 ஆண்டு பழமைவாய்ந்த கலை கல்லூரியாக உள்ளது. இந்த கல்லூரிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் அவ்வப்போது செய்து வருகிறோம். அதன் அடிப்படையில் தனது சைதாப்பேட்டை சட்டமன்ற நிதியில் இருத்து 4.7 கோடி
ரூபாய் மதிப்பீட்டில் 10 ஆயிரத்து 760 சதுர அடியில் குளிர்சாதன வசதியுடன் அரங்கம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மாதம் இறுதியில் இந்த பணிகள் நிறைவு பெற உள்ளது.

2,553 மருத்துவப் பணியிடங்களை நிரப்புவதற்கு 24 ஆயிரம் பேர் தேர்வு எழுதியுள்ள நிலையில் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. கொரோனா காலத்தில் பணியாற்றியவர்களுக்கு மெரிட் அடிப்படையில் நிரப்ப நடவடிக்கை எடுத்துள்ளோம்.

கொரோனா காலத்தில் பணியாற்றியவர்கள், மதிப்பெண் வேண்டி விண்ணப்பித்தவர்கள் அனைவரும் கொரோனா காலத்தில் பணியாற்றி உள்ளார்களா என்பதை உறுதி செய்த பின் போனஸ் மதிப்பெண் வழங்கப்பட்டு ரிசல்ட் வெளியிடப்படும். விரைவில் காலி பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும்.

மருத்துவ படிப்பில் தமிழ்நாடு பின்னுக்கு வருவதற்கு பாஜக அரசுதான் காரணம். தமிழ்நாட்டுக்கு புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகள் வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து மத்திய அரசிடம் வைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மயிலாடுதுறை, காஞ்சிபுரம், தென்காசி, பெரம்பலூர் ராணிப்பேட்டை போன்ற ஆறு மாவட்டங்களுக்கு மருத்துவ கல்லூரி வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் மருத்துவ கல்லூரிகளில் கூடுதல் இடங்களை அதிகரிப்பது குறித்தும் தமிழ்நாட்டில் நர்சிங் கல்லூரி அமைப்பதற்கு மத்திய அரசின் பங்கும் தேவை என்பதால் இந்த விவகாரம் குறித்தும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிந்த பின் நேரில் சந்திக்க தேதி கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்கள்”

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here