தமிழகத்தில் தாமரைமலர வாய்ப்பே இல்லை என வி.சி.தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில், கலைஞர் நுாற்றாண்டு நிறைவு விழாவையொட்டி அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வரலாற்று புகைப்பட கண்காட்சியை, வி.சி., தலைவர் திருமாவளவன், நேற்று பார்வையிட்டார்.
இதைத்தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில் ,கருத்துக் கணிப்புகளை, ஒரு போதும் வி.சி.,க்கள் பொருட்படுத்துவதில்லை. 10 ஆண்டுகால இருண்ட ஆட்சி, இந்தியாவை அதலபாதாள சரிவிற்கு கொண்டு சென்றுள்ளது.
மக்கள் எழுதிய தீர்ப்பு, ஜூன் 4ல் தெரியவரும். இந்தியாவை சூழ்ந்த இருள் அகலும்; புதிய வெளிச்சம் பிறக்கும்.
‘இண்டியா’ கூட்டணி ஆட்சியில் மலர உள்ளது. இக்கூட்டணி வெற்றிக்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக அமையும். தமிழகத்தில், தாமரை மலர இடமே இல்லை.
தமிழகத்தில், 40 தொகுதிகளிலும், தி.மு.க., கூட்டணி வெல்லும். தேர்தலுக்கு முன்பே, பிரதமர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இண்டியா கூட்டணி கட்சிகளிடையே ஜனநாயக புரிதல் உள்ளது.
தேர்தல் முடிவுக்கு பின், குறைந்தபட்ச செயல்திட்டம் உருவாக்கப்படும். அப்போது, பிரதமர் வேட்பாளரை தீர்மானிப்போம்.
மோடி, ஆண்டுக்கொரு பிரதமர் என, இண்டியா கூட்டணியை விமர்சித்தார். அதன் வாயிலாக அவர், இண்டியா கூட்டணி வெற்றி பெறும் என ஒப்புக்கொண்டுள்ளார்.
விலைவாசி உயர்வு, பொருளாதார வீழ்ச்சி, சமூக நல்லிணக்க பாதிப்பு உள்ளிட்ட பல பிரச்னைகள் மோடி ஆட்சி காலத்தில் தான் நடந்துள்ளது. மக்கள் பொறுக்க முடியாத அளவுக்கு சங்கடங்களை எதிர் கொண்டு வருகின்றனர்.
எனவே தான், ஆண்டுக்கொரு முறை பிரதமர் இருந்தால் தவறில்லை என கூறினேன். அது ஜனநாயக விரோத முடிவும் அல்ல; அதை நான் வரவேற்கிறேன். தமிழகத்தைப் பொறுத்த வரை தாமரை மலர வாய்ப்பே இல்லை. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.