கடந்த 2021 ஆம் காலகட்டத்தில் அதிமுக ஆட்சியில் இருந்த போது அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது முதல்வரின் சட்ட ஒழுங்கு பாதுகாப்புப் பணியில் இருந்தார் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்.
அந்த சமயம் பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக ராஜேஷ் தாஸ் மீது ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட அந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி கொடுத்த வழக்கு சிபிசிஐடி வசம் மாற்றம் செய்யப்பட்டது. விசாரனையில் ராஜேஷ் தாஸ் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதியானது. குற்றத்தில் ஈடுபட்ட ராஜேஷ் தாஸ், அவருக்கு உடந்தையாக செயல்பட்ட செங்கல்பட்டு முன்னாள் காவல் கண்காணிப்பாளர் கண்ணன் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம், ராஜேஷ் தாஸுக்கு இரு பிரிவுகளில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.20,500 அபராதமும், செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்பி கண்ணனுக்கு ரூ.500 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியது.
இதையடுத்து கீழமை நீதிமன்றம் வழங்கிய 3 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்திவைக்கக் கோரியும், சரணடைவதில் இருந்து விலக்கு கோரியும் ராஜேஷ்தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், ராஜேஷ்தாஸ் வழக்கில் இன்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம் ராஜேஷ்தாஸுக்கு வழங்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறைதண்டனையை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்தது. சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டதால், சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என்று கூறு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதனால் ராஜேஷ் தாஸுக்கு விதிக்கப்பட்ட தண்டனை உறுதியாகியுள்ளது. எனவே உடனடியாக ராஜேஷ்தாஸ் காவல் நிலையத்தில் சரணடைய வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை சரணடையாவிட்டால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வார் என்றும் கூறப்படுகிறது.