#பைரைட்ஸ் எனும் பிசாசு- 6
அன்று காலை அனைவரும் வாட்டர் தீம் பார்க் செல்கிறோம் என்று சொன்னதும்.. செம குஷியில் இருந்தேன்..
காரணம்.. தண்ணீர் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது…
அதுவும் தண்ணீரில் விளையாட்டென்றால் சொல்லவே வேண்டாம் .. செம ஹாப்பிதானே…
அனைவரும் 10 மணிக்கு பேருந்திற்குள் வர வேண்டும் என ரிச்சர்ட் முந்தைய நாள் சொல்லியிருந்தார்..
ஆனால் நாம்தான் சொல்வதை கேட்கமாட்டோமே..
ஆளாளுக்கு ஒவ்வொரு நேரத்திற்கு வந்து சேர்ந்தனர்…
ஒரு வழியாக ரீகல் பார்க்கிலிருந்து 10.30 மணிக்கு பேருந்து கிளம்பியது…
பேருந்தில் பயணித்துக் கொண்டிருக்கும் போது ஜன்னல் வழியாகப் பார்த்தேன்.. நான் பார்த்த வரையில் ஒரு இங்கு போக்குவரத்து நெரிசலும் இல்லை… போக்குவரத்து மீறலும் இல்லை… சாலை விதியை அவ்வளவு கண்ணியமாக கடைபிடிக்கிறார்கள்.. சாலைகள் மொழுகி வைத்த தரை போல பளிச்சென காட்சி தருகின்றன… இன்னும் உங்களுக்கு விளக்கிச் சொல்வதென்றால் நம்ம ஊர் தேசிய நெடுஞ்சாலைகளை விட நன்றாகவே காட்சியளிக்கின்றன..வானுயர கட்டடங்கள்… அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் பெயர்கள்.. என எல்லாவற்றையும் ரசித்தபடியே பயணித்தேன்.. எந்த கட்டடத்தைப் பார்த்தாலும் முன்பு பார்த்த மாதிரியே ஒரு தோற்றத்தைக் கொடுத்தது..
நீண்ட நெடிய பயணத்திற்குப் பிறகு, ஒரு வழியாக வாட்டர் தீம் பார்க்கிற்குள் பேருந்து நின்றது… எங்கள் அனைவரையும் அழைத்துச் சென்ற ரிச்சர்ட் எங்களுக்கான டிக்கெட்டுகள் மற்றும் உணவு அருந்துவதற்கான டோக்கன் என அனைத்தையும் வாங்கி கையில் கொடுத்து விட்டு, மாலை 6 மணிக்கு வந்து விட வேண்டுமென டெட்லைன் கொடுத்து விட்டு விடைபெற்றார்..
முதலில் அனைவரும் ஒன்றாக நின்று செல்ஃபிக்கு போஸ் கொடுத்தோம்…
அடுத்த ஐந்தாவது நிமிடம் யாருமே இல்லை…ஆளாளுக்கு ஒரு குழுவை அமைத்துக் கொண்டு சிட்டாக பறந்து விட்டனர்…
எப்போதும் போல நான்,விகாஷ்,மதன் சார்… மூவரும் உடைகளை மாற்றும் அறையை நோக்கி சென்றோம்…
அங்கு எங்களுக்குத் துணையாக பார்த்திபன், வர்ஷினி, ஜெய்மீ, கிருஸ்டினா என ஒரு குழுவானோம்.. ஒரே லாக்கர் அறையை எடுத்து எங்கள் அனைவரின் உடைமைகளை ஒன்றாக வைத்துக் கொண்டோம்..
மாலை வரை இந்த கூட்டணி பிரியக் கூடாது என்ற நிபந்தனையோடு ஒன்றாக விளையாட்டை விளையாட ஆயத்தமானோம்…
வாட்டர் விளையாட்டுதானே என்ற மிதப்பில் கால்களில் ஷூ கூட இல்லாமல் வெற்றுக் கால்களோடு புறப்பட்டது எவ்வளவு பெரிய தவறு என்பது பாதம் சுடும் போது புரிந்தது..
நாங்கள் முதலில் நுழைந்தது பைரைட்ஸ் விளையாட்டை விளையாட…
பைரைட்ஸ் என்றதும் நீங்கள் ‘பைரைட்ஸ் ஆப் த கரீபியன்’ போன்ற கப்பல் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம்..
அந்த கப்பல் கடலில் போடும் ஆட்டத்தை விட, இந்த பைரைட்ஸ் தரையில் போடும் ஆட்டம் பெரிது என்று அதில் ஏறும் வரை எனக்குத் தெரியாது..
எனக்கு இதிலெல்லாம் ஏறுவதற்கு சுத்தமாக தைரியமே இல்லை என்பது தான் உண்மை…
ஊர் திருவிழாக்களின் போது கூட ராட்டினம் ஏறாதவன் இது போன்ற ராட்சத பைரைட்ஸ்களிடம் சிக்குவேனா… ?
ஆனால் சிக்கிக் கொண்டேன்… காரணம் விகாஷ் என்ற படுபாவி.. ”அண்ணே அண்ணே” என்று அன்பாக பேசி என்னை சிக்க வைத்துவிட்டான்.
வேண்டாம் வேண்டாம் என்று எவ்வளவோ கெஞ்சினேன்… ஆனால் கொஞ்சமாவது கேட்டானா…? கேட்கவே இல்லையே… ’நானும் எவ்வளவு தான் கெஞ்சுவது…;’
சரி இப்போது ஒத்துக் கொண்டு அவன் பைரைட்ஸ்சில் ஏறியதும் ஓடிவிடலாம் என்று திட்டம் போட்டு வைத்திருந்தேன்…
அடுத்த ஐந்தாவது நொடி என் திட்டத்திலும் மண் விழுந்தது..
சாம் சார், மோனிகா மேம், விக்னேஷ் டாக்டர் என அனைவரும் சிரித்தபடியே அங்கு வந்து சேர்ந்தனர்..
எங்களோடு அவர்களும் ஐக்கியமானார்கள்…
இனிமேல் என்னதான் நினைத்தாலும் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.
“நீங்க இப்பதான் இங்க வரனுமா… கொஞ்ச நேரம் கழித்து வந்திருந்தால் ஓடியிருப்பேனே…”
என மனதிற்குள் நினைத்திருந்தேன்…
”நான் வரலை” என்றார் சாம் சார்…
“அப்பாடா ஒரு கம்பெனி கிடைத்து விட்டது…! அவருக்குத் துணையாக நாமும் இறங்கி விடலாம்..” என்று நம்பிக்கை வைத்திருந்தேன்..
ஆனால் கேட் திறக்கப்பட்டதும் முதல் ஆளாக பைரைட்ஸில் அடியெடுத்து வைத்தது அவர் தான்…
“உங்களை எவ்வளவு நம்புனேன் சார்… நீங்க இப்படியெல்லாம் செய்யலாமா… ?” என மனதுக்குகுள்ளே நினைத்துக் கொண்டேன்…
என் கடைசி நம்பிக்கையும் தளர்ந்தது…
இனி என்ன செய்வது.. விளையாடுவதொன்றே கடைசி வழி…
பக்கத்தில் உட்கார்ந்திருந்த விகாஷ் என்னைப் பார்த்து சிரித்தான்..
”ஒருவனை துன்பத்தில் தவிக்க விட்டு, உனக்கு எப்படியடா சிரிப்பு வருகிறது கிராதகா ” என்று சொல்லத் தோன்றியது…
பைரைட்ஸ் தன் ஆட்டத்தினை மெதுவாக ஆட துவங்கினான்..
முதலில் தாலாட்டுவதைப் போலத்தான் ஆரம்பித்தான். அந்த தாலாட்டே எனக்கு சொர்க்கத்தைக் காட்டியது.. அடுத்த நொடி கண்களை நன்றாக இரு கைகளாலும் மூடிக் கொண்டேன்…
விண்ணில் பயணித்த யாராவது குப்புறப் படுத்திருப்பதை உணரமுடியுமா? நான் உணர்ந்தேன்..
சில நேரங்களில் என் இரண்டு கால்களும் விண்ணை நோக்கி வணக்கம் சொல்லின…
உடல் விண்ணில் மிதந்தது…
எல்லாவற்றையும் உணர மட்டுமே செய்தேன்.. நான் தான் கண்களை இருக்க மூடிவிட்டேனே…
அடிவயிற்றுக்குக் கீழே உள்ள குண்டுகள் இதயத்தை நோக்கி இடம் மாறுமளவுக்கு அந்த பைரைட்ஸ் பிசாசு ஆட்டம் காண்பித்து விட்டது…
எங்களுக்கு எதிர்முனையில் சார்,மேம் என இருவரும் அமர்ந்திருந்தனர்..
அந்தரத்திலே வைத்து வித்தைக் காட்டியது அந்த பைரைட்ஸ்…
நானாவது பரவாயில்லை.. கண்களை இறுக மூடியவாறு இருந்தேன்..
பக்கத்தில் இருந்த விகாஷ் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசிக் கொண்டிருந்தான்..
அதைக் கேட்கும் போது எனக்கு ஒரு பக்கம் சிரிப்பு வேறு வந்து தொலைத்தது…
ஒரு வழியாக ஆட்டம் ஓய்ந்தது..
இனி இந்த பக்கவே தலை வைத்து படுக்கக்கூடாது என்பது போலத்தான் கீழிறங்கினேன்…
பெரிய கும்புடு போட்டுவிட்டு அதிலிருந்து வெளியேறினேன்…
”என்னம்மா… கண்ணை ரெண்டு கையை வெச்சு மூடிட்டு இருந்த ” என்று சார் கேட்டார்..
வழக்கம் போல ஏதோ சொல்லி சமாளித்துவிட்டேன்…
”ஒரே அசிங்கமா போச்சு குமாரு…. ”
தொடரும் –
-ர-ஆனந்தன்