கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 400 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். ஜூலை 30 அன்று அதிகாலை முண்டக்கை மற்றும் சூரல்மலை ஆகிய மலை கிராமங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி நூற்றுக்கணக்கான மக்கள் மண்ணில் புதைந்தனர்.
விபத்து அன்று காலை முதல் இன்று வரை 10 நாட்களாக ராணுவ வீரர்கள் மற்றும் 9 மீட்பு குழுவினர் இரவு பகலாக உயிருக்கு போராடும் மக்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நிலச்சரிவில் சிக்கியவர்களின் உடலை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்த ராணுவ வீரர்களுக்கு, அவர்களின் உறவினர்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தனர்.
எவ்வளவோ கஷ்டங்களுக்கு மத்தியிலும், முறையான உணவு கூட இல்லாமல், பிஸ்கட், ரொட்டி மற்றும் பிற பொருட்களை சுமந்து கொண்டு மீட்புப் பணியாளர்கள் இரவும் பகலும் உழைத்தனர். மேலும் நிலச்சரிவால் துண்டிக்கப்பட்ட முண்டக்கை மற்றும் சூரல்மலையை இணைக்கும் விதமாக 31 மணி நேரம் போராடி 190 அடி தற்காலிக பாலத்தையும் கட்டி முடித்தனர்.
1000-க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர், மற்றும் 100-க்கும் மேற்பட்ட உடல்கள் கண்டெடுக்கப்பட்ட இருக்கின்றன. தனது பணியை முடித்து விட்டு இந்திய இராணுவ வீரர்கள் ஆகஸ்ட் 8, 2024 அன்று கேரளாவின் வயநாட்டில் இருந்து விடைபெற்றனர். விடைபெற்றுச் சென்ற இராணுவ வீரர்களை, கேரள மக்கள் தேசிய கீதம் பாடி கண்ணீர் மல்க கைதட்டி விடை கொடுத்தனர்.
இத்தனை நாட்களாக எங்களுடன் இருந்த ராணுவ வீரர்கள் எங்களை விட்டுப் பிரிந்து செல்வது வருத்தமளிக்கிறது, ஆனால் அவர்கள் இங்கு வந்த பிறகு ஒரு உயிர் கூட போகாமல் பார்த்துக் கொண்டனர். அவர்கள் தங்கள் கடமையைச் சிறப்பாக செய்தனர் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
காணாமல் போனவர்களில் சிலர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும், 12 பேர் கொண்ட இராணுவக் குழு கேரள காவல்துறையுடன் சேர்ந்து தொடர்ந்து பணியாற்றுகிறது. பெரும் சோகத்திற்குப் பிறகு மீட்புப் பணியில் ஈடுபட்ட ராணுவத்துக்கு கேரள மக்கள் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த தேசமும் நன்றி தெரிவித்தது.