அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர்க் கல்வி பயிலும் கல்லூரி மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்குவதற்கான தமிழ்ப்புதல்வன் திட்டம், மாநில அளவில் நேற்று தொடங்கப்பட்டது.
இதற்கான தொடக்க விழா கோவையில் உள்ள அரசுக் கலைக்கல்லூரி மைதானத்தில் நடந்தது. இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு இந்த திட்டத்தை தொடங்கி வைத்து, அரசு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.1,000 வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கோவை தெற்கு தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்ப்புதல்வன் திட்டம் மிகவும் நல்ல திட்டம் எனவும் இந்த திட்டத்தை மாணவர்கள் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் எனவும் பதிவு செய்தார்.