பீகாரில் முதற்கட்ட வாக்குப்பதிவு நெருங்குவதால் தேர்தல் பரப்புரை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் பீகார் தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் நரேந்திர மோடி,
“தமிழ்நாட்டில் வேலை செய்யும் பீகார் மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் “என்று பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன்,
“பீகாரில் வாக்குகளை பெறுவதற்காக பாஜக இத்தகைய அரசியலை செய்கிறது.பிரதமரே இப்படி பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
பீகாரை சேர்ந்தவர்கள் இப்படி எதாவது புகார் அளித்திருக்கிறார்களா, அதற்கு ஆதாரம் இருக்கிறதா என்று தெரியவில்லை. பீகாரில் இருந்து மட்டும் அல்ல, வடமாநிலங்களில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் சென்னை, கோவை, திருப்பூர் போன்ற பகுதிகளில் புலம்பெயர் தொழிலாளர்களாக பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு தமிழ்நாட்டில் எந்த பிரச்சனையும் இல்லை. எப்படி இப்படி ஒரு பிரதமர் அண்ட புளுகு, ஆகாச புளுகை தேர்தல் ஆதாயத்திற்காக பிரதமர் பேசுகிறார் என்று கேள்வி எழுகிறது. இது எவ்வளவு ஆபத்தான அணுகுமுறை என்ற அச்சம் மேலெழுகிறது.
தமிழ்நாட்டில் இப்படி ஏதும் வழக்குகள் பதிவாகி இருக்கிறதா என்ற ஆதாரத்தை அவர் காட்ட வேண்டும். இது ஏற்புடையது அல்ல, பிரதமர் அவர்களின் இந்த கருத்தை விசிக வன்மையாக கண்டிக்கிறது. அவருக்கு தேர்தல் அரசியலே முக்கியமானதாக இருக்கிறது ஆதாயம் தேடுவதே அவரின் நோக்கமாக இருக்கிறது.
ஒடிசா மாநில சட்டப்பேரவை தேர்தலின் போது, ஒடிசா மாநிலத்தை ஒரு தமிழன் ஆட்சி செய்ய நீங்கள் அனுமதிப்பீர்களா என்று பாஜவினர் கேட்டார்கள். ஒரு ஐஏஎஸ் அதிகாரி அங்கு முதல்வர் ஆகிவிடுவார் என்று யுகம் செய்து அதையே அரசியலாக்கினார்கள்.ஆனால். தமிழ்நாட்டிற்கு வந்தால் தமிழ்ப்பெருமை பேசுகிறார்கள்.பாரதியாரின் கவிதைகளை மேற்கோள் காட்டுகிறார்கள்.திருக்குறளை எடுத்து பேசுகிறார்கள். சாதி பெருமைகளை பரப்புகிறார்கள் இப்படியெல்லாம் தமிழகத்தில் அரசியல் செய்து விட்டு, ஒடிசா மாநிலத்தை ஒரு தமிழன் ஆட்சி செய்ய நீங்கள் அனுமதிப்பீர்களா என்று பாஜகவினர் கேட்டார்கள்.
பாஜகவினர் வெறும் வாக்குவங்கி அரசியலுக்கான யுக்திகளையே கையாளுகிறார்கள். மக்களுக்கிடையே பாகுபாடுகளை உருவாக்குகிறார்கள். அது தான் பிரதமரின் அணுகுமுறையாகவும் இருக்கிறது என்பது அதிர்ச்சியளிக்கிறது.

