தென்காசி மாவட்டத்தில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு பூக்களின் விலை சற்று அதிகரித்துள்ளது. பண்டிகை காலங்களில் பூக்களின் விலை வழக்கமாக உயர்ந்து காணப்படும். சாதாரண நாட்களை விட பண்டிகை, முகூர்த்த நாட்களில் பூக்களின் விலை விண்ணைத் தொடும். இதனால் விவசாயிகள், வியாபாரிகளுக்கு பண்டிகை காலங்களில் நல்ல லாபம் கிடைப்பது வழக்கம்.
குறிப்பாக ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜய தசமி போன்ற முக்கிய நாட்களில் பூக்கள் விலை அனைத்து இடங்களிலும் கடும் உயர்வை சந்திக்கும். அந்த வகையில், தற்போது தென்காசி மாவட்டத்தின் பிரதான பூ மார்க்கெட்டுகளில் விற்பனை அதிகரித்துள்ளதால், பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
முக்கிய பூக்களின் இன்றைய விலை நிலவரம்
பண்டிகை தேவைகளுக்காக பல்வேறு வகையான பூக்கள் தேவைப்படுவதால், அவற்றின் விலையிலும் பெரும் ஏற்றம் காணப்படுகிறது. இன்றைய (செப்டம்பர் 30, 2025) நிலவரப்படி, தென்காசி மாவட்டத்தில் பூக்களின் விற்பனை விலை பின்வருமாறு உள்ளது:
- மல்லிகைப் பூ: ஒரு கிலோ ரூ. 900
- பிச்சிப் பூ: ஒரு கிலோ ரூ.800
- சம்பங்கி பூ: ஒரு கிலோ ரூ.300
- கேந்தி பூ: ஒரு கிலோ ரூ.60-70
- செவ்வந்திப் பூ: ஒரு கிலோ ரூ.230
- ரோஸ் பூ: ஒரு கிலோ ரூ.330
இந்த விலை உயர்வு பூ வியாபாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் லாபத்தை ஈட்டித் தந்துள்ளது.
கேந்தி பூ விலை ஏற்றத்தால் விவசாயிகள் உற்சாகம்
சமீப நாட்களாக கேந்தி பூவின் விலை மிகவும் வீழ்ச்சி அடைந்திருந்தது. சில நாட்களுக்கு முன்பு கேந்தி பூ ஒரு கிலோ 10 ரூபாய்க்கு மட்டுமே விற்பனையானதால் விவசாயிகள் கவலை அடைந்தனர். பெரும் சிரமங்களுக்கிடையே விளைவிக்கப்பட்ட பூவுக்கு மிகக் குறைந்த விலை கிடைத்ததால் அவர்கள் நஷ்டத்தை சந்திக்க நேரிட்டது.
இந்த நிலையில், தற்போது ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜைக்காக கேந்தி பூவின் தேவை அதிகரித்துள்ளதால் அதன் விலை கிலோவுக்கு ரூ.60 முதல் ரூ.70 வரை உயர்ந்துள்ளது. இந்த திடீர் விலை உயர்வு விவசாயிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விலை உயர்வால் லாபம் கிடைத்திருப்பது தங்களது உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரம் என விவசாயிகள் கருதுகின்றனர்.
வாடிக்கையாளர்கள் நிலை என்ன?
இருப்பினும், இந்த விலை உயர்வு பூக்களை வாங்கி வழிபட வேண்டிய பொதுமக்களுக்கு சற்று சுமையாகவே உள்ளது. ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நாட்களில் வீடுகள், கடைகள், தொழில் நிறுவனங்கள் என அனைத்து இடங்களிலும் பூக்களின் தேவை பன்மடங்கு அதிகரிக்கும். இந்த அத்தியாவசிய பண்டிகை பொருளின் விலை கிடுகிடுவென உயர்ந்திருப்பது வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
பண்டிகையை கொண்டாட பூக்கள் கட்டாயம் தேவை என்பதால், பொதுமக்கள் அதிக விலையிருந்தாலும் வாங்கியே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பொதுவாகவே இதுபோன்ற முக்கிய பண்டிகைகள் வரும் நாட்களில் பூக்களின் உற்பத்தி குறைந்து, தேவை அதிகரிப்பதே இந்த திடீர் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைகிறது. பூக்கள் விலை இன்னும் ஓரிரு நாட்களில் மேலும் உயர வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.