இந்தியக் கல்வி அமைப்பில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், உச்ச நீதிமன்றம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கியுள்ளது. 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்குப் பள்ளிகளில் இலவச சானிட்டரி நாப்கின்கள் மற்றும் தரமான கழிப்பறை வசதிகளை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அடிப்படை உரிமையாக அங்கீகாரம்: இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 21-ன் கீழ் (Article 21), கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு. இதன் ஒரு பகுதியாக, “மாதவிடாய் சுகாதாரத்திற்கான உரிமை மற்றும் சுகாதாரப் பொருட்களைப் பெறுவதற்கான உரிமை” ஆகியவற்றை ஒரு அடிப்படை உரிமை என்று நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. மாதவிடாய் காலங்களில் போதிய வசதிகள் இல்லாத காரணத்தால் ஏழை மாணவிகள் பள்ளிப் படிப்பைப் பாதியில் கைவிடுவதைத் தடுக்க இந்தத் தீர்ப்பு வழிவகை செய்கிறது.
உச்ச நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவுகள்:
- இலவச நாப்கின்கள்: அரசு மற்றும் தனியார் என அனைத்துப் பள்ளிகளிலும் மாணவிகளுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் ‘மக்கும் தன்மை கொண்ட’ (Biodegradable) சானிட்டரி நாப்கின்கள் இலவசமாக வழங்கப்பட வேண்டும்.
- தனித்தனி கழிப்பறைகள்: நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள ஒவ்வொரு பள்ளியிலும் ஆண்கள் மற்றும் பெண்களுக்குத் தனித்தனியாக, தடையற்ற நீர் வசதியுடன் கூடிய கழிப்பறைகள் இருக்க வேண்டும்.
- சோப்பு மற்றும் தண்ணீர்: அனைத்து நேரங்களிலும் கழிப்பறைகளில் சோப்பு மற்றும் தண்ணீர் இருப்பதை மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் உறுதி செய்ய வேண்டும்.
கடுமையான எச்சரிக்கை: இந்த உத்தரவுகளைப் பின்பற்றத் தவறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதிகள் எச்சரித்துள்ளனர். “சுகாதார விதிகளை மதிக்காத பள்ளிகளின் அங்கீகாரம் (Affiliation/Recognition) ரத்து செய்யப்படும்,” எனத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் ‘மாதவிடாய் சுகாதாரக் கொள்கையை’ அகில இந்திய அளவில் செயல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
இந்தத் தீர்ப்பு, கோடிக்கணக்கான மாணவிகளின் கல்வி மற்றும் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதோடு, மாதவிடாய் குறித்த சமூகத் தடைகளை உடைப்பதிலும் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

