நெல்லை- ஆலங்குளம் தொகுதி அதிமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தார். ஓபிஸ் ஆதரவாளரான இவர் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்து கொண்டார்.
திமுகவில் இணைந்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
நான் திமுகவில் இணைந்ததற்கு காரணம், எஞ்சிய வாழ்க்கையிலும் இந்த திராவிட கொள்கையினை பாதுகாக்கக்கூடிய இயக்கமாகவும், அதை தலைமையேற்று இருக்கக்கூடிய தலைவரின் சிந்தனைகளை நிறைவேற்ற கூடிய தொண்டனாகவும் என்னை இணைத்து பணியாற்ற இங்கே நான் வந்திருக்கின்றேன்.
இன்று மாலை 4 மணிக்கு என்னுடைய எம்எல்ஏ பதவியினை ராஜினாமா செய்கிறேன்.
அதிமுகவை எம்ஜிஆர்- ம், அதற்கு பின் வந்த ஜெயலலிதாவும் எந்த இயக்கத்திடமும் அடகு வைக்கவில்லை.
இன்றைய அதிமுக என்பது வேறு ஒரு இயக்கத்தை நம்பி, அந்த இயக்கியத்தின் சொல்படிதான் நடக்க வேண்டிய சூழ்நிலை இருக்கின்ற காரணத்தினாலும், எந்த விதிகளை அதிமுக நிறுவன தலைவர் உருவாக்கினாரோ அந்த விதிகளை காற்றில் பறக்கவிட்டு, எந்த கொள்கைகளுக்காக அந்த இயக்கம் உருவாக்கப்பட்டதோ, அந்த கொள்கைகளையும் காற்றில் பறக்கவிட்டு அதிமுக, பாஜகவின் கிளைகழமாக செயல்படக்கூடிய சூழ்நிலை தான் இருக்கிறது.
திராவிடர் கொள்கைகளை பறைசாற்றக்கூடிய , பாதுகாக்கக்கூடிய இயக்கம் திமுக என்பதால் தான் அதில் நான் இன்று இணைந்துள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 