நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை அக்டோபர் 20 அன்று கொண்டாடப்பட இருக்கிறது.இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தீபாவளி வாழ்த்து பதிவை தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அந்த பதிவில் கூறியிருப்பதாவது,
” உலகெங்கிலும் உள்ள மக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் சிறப்பு மிக்க பண்டிகையாம் தீபாவளித் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்களை பெருந்துன்பத்திற்கு ஆளாக்கிய நரகாசுரன் எனும் அரக்கனை திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்நாள் இருள் விலகி ஒளி பிறக்கும் தினமாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் சுடர்விட்டு பிரகாசிக்கும் தினமாகவும் மக்களால் கருதப்படுகிறது.
அனைத்துத் தர மக்களையும் பெருந்துன்பத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு அகன்று, நாட்டு மக்கள் அனைவரும் இன்புற வரும் காலங்களில் நல்லாட்சி அமைய வேண்டும் என்று இந்த இனிய நாளில் சூளுரைப்போம்.
நாடெங்கும் அன்பும் அமைதியும் தழைக்கட்டும், வேற்றுமை அகன்று ஒற்றுமை ஓங்கட்டும், அனைவரது வாழ்விலும் வளமும் நலமும் பெருகட்டும் என்று அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன் ” என கூறப்பட்டுள்ளது.