கலை பண்பாட்டு இயக்ககத்தின் ஓர் அங்கமாகத் திகழும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், பொங்கல் திருநாளை முன்னிட்டு ‘கலைச் சங்கமம்’ என்ற கலை விழாவை நடத்துகிறது.
இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு, சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் பேசிய தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவர் வாகை சந்திரசேகர், “தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும், ஜனவரி 18-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஒரே நாளில் மாலை 6 மணிக்கு இந்தக் கலை விழா நடைபெற இருக்கிறது.
இந்த விழாவில், அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில், அமைச்சர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ள இருக்கின்றனர். அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த சிறப்பிற்குரிய, பாரம்பரிய கிராமிய கலை நிகழ்ச்சிகள் இதில் நடைபெறுகின்றன. இதற்காக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளார்.
இத்துடன், சென்னையில் வருகிற ஜனவரி 22-ம் தேதி மாலை 6 மணிக்கு ராஜா அண்ணாமலைபுரம் முத்தமிழ்ப் பேரவையில் இயல் சங்கமமும், ஜனவரி 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் மாலை 6 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் இசை மற்றும் நாட்டியச் சங்கமமும் நடைபெற உள்ளது. இந்தக் கலைச் சங்கமத்தில், நான்காயிரத்துக்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்குபெற உள்ளனர்” என்றார்.

